தேன் குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வருடியவர் லதா மங்கேஷ்கர்: தமிழக முதல்வர் இரங்கல்
லதா மங்கேஷ்கர் தனக்கென வாழாது, தான் திரட்டிய செல்வத்தை மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அறப்பணிகளிலும் ஈடுபட்ட மனிதநேயம் மிக்கவர் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைந்த செய்தியால் மிகுந்த வேதனையடைகிறேன். எண்பதாண்டுகாலம் பரந்து விரிந்ததான அவரது இசை வாழ்வில் தனது தேனையொத்த குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் அவர் வருடிச் சென்றுள்ளார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
மத்திய பிரதேசத்தில் பிறந்து, மகாராஷ்டிடிர மாநிலத்தில் வாழ்ந்த இசைத் துறையில் உலகப் புகழ் பெற்ற இசைக்குயில், இந்தியாவின் நைட்டிங்கேல் என்று புகழ் பெற்ற லதா மங்கேஷ்கர் (வயது 92) அவர்கள், உடல் நலக்குறைவால் மும்பை யின் பிரபல மருத்துவமனை ஒன்றில் இன்று (6.2.2022) விடியற்காலை காலமானார் என்ற செய்தி – மிகவும் துயரத்திற்குரியதாகும்.ஹிந்தி, மராத்தியில் பாடத் துவங்கி புகழ் ஏணிக்குச் சென்ற அந்த அம்மையார் தமிழிலும் சிறப்பாகப் பாடியுள்ளார் என்பது பெருமைக்குரிய ஒன்று.
தனக்கென வாழாது, தான் திரட்டிய செல்வத்தை மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அறப்பணிகளிலும் ஈடுபட்ட மனிதநேயம் மிக்கவர்.
அவரது இழப்பு நாட்டிற்கும், இசை உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், இசை ரசிகர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.