துருக்கியுடனான பதற்றத்திற்கு மத்தியில் ஆயுதம் வாங்குவது தொடர்பாக கிரேக்கம் ஆலோசனை!
கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிவாயு மற்றும் எண்ணெய் உரிமைகோரல்களுக்கான மோதல் அதிகரித்து வருகின்ற நிலையில், கிரேக்கம் தனது ஆயுதப் படைகளை வலுப்படுத்த, ஆயுதம் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நாடு தனது பண இருப்புக்களில் ஒரு பகுதியை ஆயுத கொள்முதல் மற்றும் பிற வழிகளில் செலவிடத் தயாராக உள்ளது என அரசாங்க அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘எங்கள் நாட்டின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதற்காக நாங்கள் பிரான்சுடன் மட்டுமல்லாமல், பிறநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த கட்டமைப்பிற்குள், விமானம் வாங்குவதை உள்ளடக்கிய ஒரு விவாதம் உள்ளது. எனினும், இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை’ என கூறினார்.
பிரான்ஸில் இருந்து டசால்ட் தயாரித்த 18 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஏதென்ஸ் ஒப்புக் கொண்டதாக கிரேக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எனினும், பல ஊடகங்களில் எழுதப்பட்டபடி எந்த உடன்பாடும் இல்லை.
கிரேக்க தீவான கஸ்டெல்லோரிசோவிற்கு துருக்கிய கடற்படைக் கப்பலான ‘ஓருக் ரெய்ஸ்’ என்ற ஆய்வுக் கப்பலை துருக்கி அனுப்பியபோது இருநாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
பிரான்சும் ஜேர்மனியும் பதற்றத்தைத் தணிக்க மத்தியஸ்தம் செய்ய முயன்று வருகின்றன. கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை இரண்டு முறை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு பேசினார்.
இதனிடையே, கிழக்கு மத்தியதரைக் கடலில் கிரேக்கம் மற்றும் சைப்ரஸுடனான அதிகரித்துவரும் பதற்றங்களைக் குறைப்பதில் முன்னேற்றம் காணப்படாவிட்டால், துருக்கிக்கு புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் கடுமையான பொருளாதார நடவடிக்கைகள் விதிக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.