தீவிர அரசியலில் கால்பதிக்க வியூகம் – தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் ரஜினி?
எதிர்வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகும் நடிகர் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார். அடுத்த மாதம் அதிரடியான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலில் குதிக்காமலேயே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் ரஜினிகாந்த்.
கடந்த 1996-ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ பட வெற்றி விழாவின் போது ரஜினி பேசிய பேச்சுக்கள் அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு எதிராக அவர் கொடுத்த வாய்ஸ் இப்போதும் பேசப்பட்டு வருகிறது. அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., த.மா.கா. கூட்டணிக்கு அவர் அளித்த ஆதரவே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
அந்த தேர்தலின் போதே ரஜினிகாந்தை அரசியலுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது பலனளிக்கவில்லை. அப்போது இருந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த் அரசியலில் குதித்து இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கணித்திருந்தனர்.
ஆனால் ரஜினியோ தனது திரைப்படங்கள் மூலமாக மட்டுமே அரசியல் பேசி வந்தார். அரசியல்வாதியாக மாறாமலே இருந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய சக்திகளாக திகழ்ந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட்டார். வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம் என்று ரசிகர்கள் முன்னிலையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றிய ரஜினி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமித்து கட்சிக்கான அடித்தளத்தை அமைத்தார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ரஜினி பின்வாங்கினார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பே வெளியிட்டு விட்டு தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கி கொண்டார்.
அதே நேரத்தில் ஓராண்டுக்கு முன்னர் அரசியல் கட்சி தொடங்கிய கமல் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டார்.இது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த ரஜினி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்தனர். எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்குமாறு ரசிகர் மன்றத்தினர் அறிவுறுத்தப்பட்டனர்.
சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக அறிவித்த ரஜினி தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் எனது நிலைப்பாட்டை மேலும் தெளிவுபடுத்துவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
அடுத்த மாதம் 23-ந் தேதி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி தனது எண்ணத்தை விரிவாக வெளிப்படுத்த உள்ளார். இது தொடர்பாக அதிரடி அறிவிப்பை அவர் வெளியிடுகிறார்.
தர்பார் படப்பிடிப்புக்காக தொடர்ச்சியாக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள ரஜினி அடுத்த மாத இறுதியில் அதனை இறுதி செய்கிறார். இதன் பின்னர் சென்னை திரும்பியதும் தனது ரசிகர்களுடன் அவர் மீண்டும் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை தேர்தலுக்காக ஆயத்தப்படுத்த முடிவு செய்து உள்ளார்.
இதன்படி தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ரஜினியின் அரசியல் பிரவேச நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் ரஜினி ரசிகர்களும் நேரடியாக அரசியல் களத்தில் குதிக்க தயாராகி வருகின்றன.