தி.மு.க.வுக்கு மீண்டும் வைகோ திரும்ப வேண்டும்- நாஞ்சில் சம்பத்
மேல்சபை எம்.பி.யாக்கி அழகு பார்த்த தி.மு.க.வுக்கு மீண்டும் வைகோ திரும்ப வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று நாஞ்சில் சம்பத் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மக்கள் தூக்கி எறிந்து விட்டனர். தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள், நீட் தேர்வு போன்றவற்றிற்கு தேர்தல் மூலம் மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்று தராத பாரதிய ஜனதா ஆட்சிக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதி, கேரளாவில் முல்லை பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி அளித்தது போன்ற செயல்களுக்கு தமிழக மக்கள் தேர்தல் மூலம் பதில் கூறி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சிலரை வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பாரதிய ஜனதா போட்ட கணக்கு தோல்வி அடைந்து விட்டது. தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு கிடைத்த தோல்வி, இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வாக்காளர்களை போல இந்திய வாக்காளர்கள் விழித்திருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
தமிழகத்தின் வடமாவட்டங்களில் வலிமையாக இருந்த பா.ம.க., பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் கணக்கை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் வலம் வந்த தே.மு.தி.க.வும் மக்களால் புறம் தள்ளப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் இத்தேர்தலில் மண் சார்ந்து, மக்கள் நலம் சார்ந்த சிந்தனையுடன் செயல்பட்டுள்ளனர். இதனால்தான் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.
தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நான், பிரசாரம் செய்தபோதே, தி.மு.க. கூட்டணிக்கு 38 தொகுதிகள் கிடைக்கும் என்று கருதினேன். தேர்தல் முடிந்ததும் இதனை தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலினிடம் தெரிவித்தேன். அதுதான் இப்போது நடந்துள்ளது.
தமிழகத்திற்கு இனி மு.க. ஸ்டாலினின் தலைமைதான் தேவை. அது காலத்தின் கட்டாயமும் ஆகும்.
தேர்தல் களத்தில் நின்ற டி.டி.வி. தினகரன் கும்பல் தேர்தலில் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். குறிக்கோள் இல்லாமல் ஒரு சிலருக்காக மட்டும் கட்சி நடத்தியவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டி உள்ளனர்.
இந்த தேர்தலில் கமல்ஹாசனுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. இனி அவர், அடுத்த தேர்தலுக்கு தான் மக்கள் முன் வருவார். அப்போது 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டு அரசியலில் இருந்து வெளியேறுவார்.
ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சியை பாராட்டி பேசியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர், பாரதிய ஜனதா கட்சியின் இன்னொரு முகமாகவே இருக்கிறது.
மத்திய மந்திரிசபையில் தமிழகத்திற்கு இடமில்லை. எந்த பதவியும் யாருக்கும் வழங்கப்படவில்லை. இதை நான், ஏற்கனவே எதிர்பார்த்தேன். பிரதமர் மோடி, புதிய இந்தியா என்று கூறி புறப்பட்டு விடுவார். இனி தமிழகத்தை கண்டுகொள்ள மாட்டார்.
தேர்தலில் களப்பணியாற்றிய வைகோவிற்கு மேல்சபை எம்.பி. பதவி வழங்கி ஏற்கனவே தி.மு.க. அழகுப்பார்த்துள்ளது. இப்போது மீண்டும் அவருக்கு மேல்சபை எம்.பி. வாய்ப்பு கிடைத்துள்ளது.
தி.மு.க.வின் கொள்கைகளுக்கும், ம.தி.மு.க.வின் கொள்கைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே வைகோ மீண்டும் தி.மு.க.வில் இணைய வேண்டும். தென்தமிழகத்தின் குரலாக வைகோவின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.
தமிழகத்தின் தேனி தொகுதியில் காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார். இது இளங்கோவன் மீது திணிக்கப்பட்ட தோல்வி ஆகும். தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 13 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இது அ.தி.மு.க.வினர் வசம் இருந்து தி.மு.க.விற்கு கிடைத்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்ற 9 தொகுதிகளிலும் பணம் பாதாளம் வரை பாய்ந்தது.
நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் வரும். அங்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சார்பில் யார் போட்டியிட்டலாம் அவர்களே வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.