தினகரனை கட்டுப்படுத்த சசிகலா விடுதலை குறித்து பேச்சு?
தினகரனை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் சசிகலா வெளியே வந்தால்தான் முடியும் என்கின்ற ஒரு முடிவுக்கு அதிமுக மற்றும் டெல்லி வந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய சூழலில் அதிமுகவிற்கு தினகரன் பல்வேறு வகையிலும் நெருக்கடி கொடுத்து வருகிறார். நாடாளுமன்ற மற்றும் 22 தொகுதி இடைத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து இந்த நெருக்கடி மேலும் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி தேர்தல் முடிவுகள் பாதகமாக இருக்கும் பட்சத்தில் தினகரனை எதிர்கொள்ள அதிமுக மேலிடம் புதிய திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி சிறையில் இருக்கும் சசிகலாவை நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுவிக்க வைத்து தினகரனுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது தான் அந்த திட்டம் என்று பேசப்படுகிறது. ஏற்கனவே தினகரன் சசிகலா இடையிலான உறவு அவ்வளவு சுமூகமாக இல்லை. தினகரனிடம் கட்சிப் பொறுப்புகளை சசிகலா கொடுத்து விட்டுச் சென்றபோது அவருடன் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரை விட்டுச் சென்று விட்டனர். இதற்கு காரணம் தினகரனின் சர்வாதிகாரம்தான் என்று வெளிப்படையாகவே பலரும் பேசுகிறார்கள்.
இந்த நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் பட்சத்தில் நிச்சயமாக தினகரனுடன் மோதல் ஏற்படும் என்றும் இதன் மூலம் சசிகலா மற்றும் தினகரன் ஆகிய இருவரின் இமேஜ் டேமேஜ் ஆகும் என்றும் அதிமுக கணக்குப் போடுகிறது. அந்தவகையில் சசிகலாவை எவ்வளவு சீக்கிரம் சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை பார்க்கும்படி டெல்லிக்கு அதிமுக தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை முன்கூட்டியே விடுவிப்பது என்பது அங்கு ஆட்சி பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் நிலைப்பாட்டை சார்ந்ததாகும். எனவே ஏதேனும் ஒரு டீலிங் மூலமாக சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க செய்வதன் மூலம் தினகரன் தரப்பில் குழப்பத்தை ஏற்படுத்த முடியுமா என்று படுதீவிரமாக திட்டம் தயாராகி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் சசிகலா முன்கூட்டியே விடுதலையாகும் விவகாரத்தில் அதிமுகவிற்கு நேரடி தொடர்பு இருப்பது போல் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதிலும் அக்கட்சியின் நிர்வாகிகள் மும்முரமாக உள்ளனர். எனவே சசிகலா குடும்பத்தினர் மூலமாக அவரை வெளியே கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. சசிகலாவை முன்கூட்டியே விடுதலை பெற வைத்து அவரிடம் நெருங்க திவாகரன் தரப்பும் முயற்சிப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
By Asianet Tamil