Main Menu

தம்பதிகளிடையே சண்டை வந்தால் மாரடைப்பு வரும்..! மருத்துவர்கள் எச்சரிக்கை

அன்றாடம் நாம் உண்ணும் கொழுப்பு உணவுகள் மட்டுமல்லாமல் குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சண்டைகளும் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாரடைப்பில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

இதயம்…! ஒவ்வொரு மனிதனும் தனது விலைமதிப்பில்லா உயிரை பூட்டி பாதுகாத்து வைத்திருக்கின்ற பொக்கிஷ பெட்டி..!

இதயத்தில் உள்ள ரத்த குழாய்களில் திடீர் அடைப்பு ஏற்பட்டு, அதனை சரி செய்ய இயவில்லை என்றால் அடுத்த சில நொடிகளில் மாரடைப்பு எற்பட்டு உடலை விட்டு உயிர் பிரிந்து விடுகின்றது. 

தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் திடீரென நிகழ்ந்த மாரடைப்பு மரணங்கள் 30 சதவீதம் என்றால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்தவர்கள் 15 சதவீதம் என்றும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தும் காப்பாற்ற இயலாமல் உயிரிழந்தவர்கள் 12 சதவீதம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதயத்தில் திடீர் அழுத்தம், இடதுபக்க தோள்பட்டையில் தொடர்வலி இருந்தால் மாரடைப்பின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம், தாடை மற்றும் கழுத்து பகுதியில் இழுத்து பிடிப்பது போன்று இருந்தாலோ அல்லது அசாதாரண சூழ் நிலையுடன் ஒருவருக்கு குளிர்சாதன அறையில் கூட வியர்த்துக் கொட்டினாலோ அது மாரடைப்பின் அறிகுறிகள் என்கின்றனர் மருத்துவர்கள்..!

மாரடைப்பு ஏற்பட நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் முக்கிய காரணிகளாக உள்ளது. புகையும், மதுபழக்கமும் மூல காரணிகளாக பார்க்கப்பட்டாலும், எண்ணெய்யில் பொறித்த வறுத்த உணவு பொருட்கள், மட்டன் குழம்பு, மட்டன் பிரியாணி போன்ற கொழுப்பு சத்து மிகுதியான உணவு பொருட்கள் இதயத்தை பதம் பார்க்கின்றன.

கேக், கிரீம் வகைகள், முந்திரி, நிலக்கடலை உணவுகள், சோடா குளிர்பானங்கள், உப்புதன்மை அதிகம் உள்ள நொறுக்கு தீனிகள், சீஸ், பட்டர், ஜாஸ், பன்னீர் வகைகள் என நாம் ருசிக்காக உண்ணும் உணவுகள் தான் இதயத்தில் ரத்த நாளங்களில் கலந்து கொழுப்பாக வளர்ந்து அடைத்து நிற்கின்றது.

ருசி தேடும் நாக்கு மட்டுமே மாரடைப்பிற்கு காரணமல்ல நம்முடைய குணங்களும் செயல்பாடுகளும் முக்கிய காரணமாகின்றது. குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களிடையே மன்னிக்கும் தன்மை இல்லாததால் கணவன், மனைவிக்கிடையே சண்டை ஏற்படுகின்றது. இந்த சண்டையால் கணவன் மனைவிக்கிடையே மன சோர்வும், மன அழுத்தம் உண்டாகின்றது. இன்னும் சிலருக்கு தாங்கள் செய்த காரியம் தோல்வியில் முடிந்து விட்டால் மன சோர்வு கொள்கின்றனர்.

சிலரோ வியாபாரத்தில் நஷ்டம் என்ற பொருளாதார நெருக்கடியில் சிக்கி மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றனர். இவை எல்லாமே மாரடைப்பை அழையா விருந்தாளியாக உடலுக்குள் அழைத்து வந்து விடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

மன சோர்வு, மன அழுத்தத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டுமானால் தினமும் காலையில் எளிய உடற்பயிற்சிகள், யோகாசனம், தியானம், நடைபயிற்சி போன்றவற்றில் ஈடுபட வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்ட தம்பதியினர் தங்களுக்குள் மன அழுத்தத்தை தவிர்க்க வாரம் ஒரு முறையாவது அமர்ந்து பேசி சிரித்து மகிழ்ந்து சந்தோசமாக இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

அதே நேரத்தில் 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருவதால் அவர்கள் தினமும் குறைந்த பட்சம் 7 மணி நேரமாவது படுத்து உறங்க வேண்டும் என்றும் சீஸ் அதிகமாக கலக்கபடும் பீட்சா, பர்க்கர் போன்ற கொழுப்பு சத்து மிக்க உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும், புகையையும் ,மதுவையும் கைவிட்டு உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தமிழகத்தில் மாரடைப்பு மரணங்களை குறைக்க தமிழக அரசு புதிய திட்டத்தை தொடங்கி செய்ல்படுத்தி வருகின்றனர். அதன்படி மாரடைப்பு சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு திட்டம் என்று பெயரிட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருதய உள்ளூடுருவி ஆய்வகம் மூலம் 6154 பேருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளித்து ரத்த குழாய் அடைப்பை ஸ்டெண்ட் பொறுத்தி மாரடைப்பில் இருந்து பாதுகாத்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் 12 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள இந்த திட்டம் மேலும் 6 அரசு கல்லூரி மருத்துவமனைகளும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. அதோடில்லாமல் மேற்கண்ட மருத்துவமனைகளுடன் 154 தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் இணைத்து மாரடைப்பு சிகிச்சைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க உள்ளனர். 

இதயம் இதமாக இருந்தால் நாமும் நலமுடன் வாழலாம் நம் உடல் மட்டுமல்ல உயிரும் நம் கையில் என்பதை உணர்வோம்..!

பகிரவும்...