தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பிய யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு
தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பும் வகையில் காணப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடந்த 1981ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவு வேளையில் யாழில் தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, அறிவியல் ஆகிய அம்சங்களை அழித்தொழிக்க வேண்டுமென்ற நோக்கில் வன்முறையொன்று நடத்தப்பட்டது.
இதன்போது, தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகமும் ஜுன் 1ஆம் திகதி அதிகாலை எரிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதிமிக்க நூல்கள் அழிந்தன.
மேலும் குறித்த காலக்கட்டத்தில் 97,000 க்கும் மேற்பட்ட விலை மதிக்க முடியாத நூல்கள் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் காணப்பட்டுள்ளன.
அதாவது ஒரு இனத்தினை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வரலாற்று சுவட்டினை அழிக்க வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழேயே இந்த கலவரம் நடத்தப்பட்டதாக தமிழறிஞர்கள் பலர் சுட்டிக்காட்டினர்.
யாழ்.நூலகமானது 1933 ஆம் ஆண்டிலிருந்தே கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. அதாவது ஆரம்பத்தில் குறித்த நூலகம் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மக்களின் ஆதரவுடன் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது.
இந்த நூலகத்தில் நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், யாழில் வெளியிடப்பட்ட பல பழமையான பத்திரிகைகளின் மூலப் பிரதிகள், யாழில் பல பகுதிகளில் கிடைக்கப்பெற்ற நூல்கள் ஆகியனவும் வைக்கப்பட்டிருந்தன.
இத்தகைய நூலகம் 1981 ஆம் ஆண்டு, தீயூட்டி எரிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் கடந்த 2004 ஆம் ஆண்டளவில் நூலகம் புனரமைக்கப்பட்டு, மீளத் திறக்கப்பட்டது.
குறித்த நூலகத்தில் தற்போது 125,000 நூல்கள் மாத்திரமே உள்ளதாகவும் தற்போது வாசகர்களின் எண்ணிக்கையும் 11,400 ஆகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு, இன்று முற்பகல் நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வொன்றினை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதம நூலகர் சுதந்தி சதாசிவமூர்த்தி தெரிவித்துள்ளார்.