கல்விச் சீர் திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு – பிரதமர் ஹரிணி
பொலன்னறுவை விஜித ஆரம்பப் பாடசாலையில் 2026.10.24 அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் சுமார் 55 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் புதிய கட்டடத்தில் எட்டு ஆரம்ப வகுப்பறைகள் அமைந்துள்ளன. கட்டடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்குக் கையளித்த பின்னர், மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர், புதிய வகுப்பறைகளின் நிலையையும் பார்வையிட்டார்.
அத்துடன், பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதில் தாக்கம் செலுத்தும் கல்விசார் மற்றும் நலன்புரிப் பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் கவனம் செலுத்தினார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும்போது பாடத்திட்டங்களை மாற்றுவது மாத்திரம் போதுமானதல்ல என்றும், அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பயிற்சி மற்றும் பொருத்தமான பாடசாலைச் சூழல் ஆகியவற்றையும் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதற்கமைய, பாடசாலைத் தொகுதியின் தயார்நிலையைக் கருத்திற்கொண்டு, புதிய பாடத்திட்டங்களைப் படிப்படியாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், பிள்ளைகள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய, ஆசிரியர்கள் பயனுள்ள வகையில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய, அதேவேளை பிள்ளைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் தரமான பாடசாலைச் சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக, ஆரம்பக் கல்வியில் வகுப்பறைகளுக்கான இடவசதிகள், தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மேம்படுவதற்கு ஏற்ப, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க எதிர்பார்ப்பதாகவும், கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக எதிர்வரும் ஆண்டில் இவ்வாண்டை விட அதிக நிதியை ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கல்வித்துறையின் தொழில்சார் தரத்தையும் தரநிலையையும் உறுதிப்படுத்துவதற்காகக் கல்விச் சபையொன்றை நிறுவுவது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கில், பாடசாலைப் பாடத்திட்டங்கள் மட்டுமன்றி, தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் ஆசிரியர் கல்விப் பாடத்திட்டங்களும் திருத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கல்வி முறையில் காணப்படும் நிறுவன ரீதியான பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் மற்றும் மனித வளப் பற்றாக்குறைகள் ஆகியவற்றுக்குத் தீர்வுகளை வழங்கி, முழுக் கல்வி முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர், அறிவு, திறன்கள் மற்றும் நற்பண்புகளைக் கொண்ட குடிமக்களை உருவாக்குவது கல்வி முறையின் முக்கிய பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைப் போலவே பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினரின் ஒத்துழைப்பும் அத்தியாவசியமானது எனக் குறிப்பிட்ட பிரதமர், கிராமியப் பாடசாலைகளைப் பாதுகாத்து, பிள்ளைகளுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார ஆகியோர், லங்காபுர பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், வடமத்திய மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
