தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும்
ஞானசார தேரரின் பொது மன்னிப்பு மீதான விடுதலை சரியா பிழையா என்பதை விட இது ஜனாதிபதியுடைய மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டுகின்றது. அதேபோல இலங்கையில் இருக்கின்ற வட கிழக்கு, மலையகம் உட்பட உள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
25.05.2019 அன்று காலை ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பாக கருத்து கேட்ட பொழுது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. இதன்போது ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட வேண்டும் என பெரும்பான்மை மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கமைய பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அவருடைய விடுதலை சரியா பிழையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க தமிழ் அரசியல் கைதிகளும் இதேபோல பொது மன்னிப்பின் கீழ் மகி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும்.
அண்மையில் வவுணதீவு வலிபார் விடுதலை ஜனாதிபதி அவர் மீது கொண்டிருந்த அக்கறையை எடுத்துக் காட்டுகின்றது. அவர் விடுதலை பெற்று வந்த பின்பு தான் அனுபவித்த துன்பங்களையும் இந்த காலகட்டத்தில் தன்னுடைய குடும்பத்தின் நிலைமை பின்னடைவை சந்தித்திருப்பதையும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதையும் ஊடகங்கள் மூலமாக தெரிவித்திருந்தார். இதே நிலையே இன்று தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு மனிதாபிமான ரீதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும்.
ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நேரடியாக தலையிட்டு இந்த கைதிகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை பெற்றுக்கொண்டு விடுதலை செய்வதற்கு அல்லது அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.