கட்டுநாயக்கவில் 15 சீனர்கள் கைது – ரூ. 3.5 கோடி பெறுமதியான போன்கள், சிகரெட்டுகள் கடத்தல்
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, சட்டவிரோதமாகப் பொருட்களைக் கடத்தி வர முயன்ற 15 சீனப் பிரஜைகள் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் வர்த்தகர்கள் என அடையாளப்படுத்தியுள்ளதுடன், வெவ்வேறு விமானங்களின் ஊடாக இலங்கையை வந்தடைந்த போதே விமான நிலைய Green Channel பாதையில் வைத்து சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
முதலாவது சம்பவத்தில், 9 சீன வர்த்தகர்கள் தமது உடல், உடைகள் மற்றும் பயணப்பொதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து 383 கையடக்கத் தொலைபேசிகள், 101 டெப்லட்டுகள் (Tabs), 6 வைபை ரவுட்டர்கள், GPS கருவிகளைக் கடத்தி வந்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் பொருட்களின் மொத்தப் பெறுமதி ரூ. 2 கோடி 40 இலட்சத்து 20 ஆயிரம் (ரூ. 24,020,000) என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவை அனைத்தும் சுங்கத் திணைக்களத்தினால் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
அதே தினத்தில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு நடவடிக்கையில், 75,900 சிகரெட்டுகளை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த மேலும் 6 சீன வர்த்தகர்கள் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமது முதுகுப்பைகள் (Backpacks) மற்றும் பயணப்பொதிகளில் இந்த சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்தமை சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்தச் சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி சுமார் ரூ. 1 கோடி 38 இலட்சத்து 50 ஆயிரம் (ரூ. 11,385,000) என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.
