தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது
தமிழகத்தில் 14 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டி அனல் காற்று வீசியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இனிவரும் நாட்களிலும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) தொடக்கத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழக கடற்கரை பகுதிகளில் பானி என்ற புயல் கரையை கடக்கக்கூடும் என்று சில நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் அறிவித்தபோது, ஓரளவு மழை வரும், அதனால் வெயிலின் தாக்கம் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் புயல் திசைமாறி தற்போது ஒடிசா மாநிலம் பூரி அருகே இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் கரையை கடக்கிறது. இந்த நிலையில் மழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தமிழகத்துக்கு தற்போது வெயிலின் தாக்கம் தான் அதிகமாக கிடைத்து இருக்கிறது. கடந்த 2 தினங்களாக வெயில் பதிவு வழக்கத்தை விட 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து இருக்கிறது.
அதிலும் நேற்று தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருக்கிறது. இதில் வேலூர், திருத்தணியில் 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியது. திருச்சி, சென்னை, மதுரையில் 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி உள்பட முக்கிய நகரங்களில் நேற்று பிற்பகலுக்கு மேல் அனல் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
‘மேகக்கூட்டங்கள் அதிகமாக இருப்பதால் நிலக்காற்று மேல்நோக்கி செல்ல முடியாமல் மீண்டும் தரைப்பகுதியை அடைகிறது. இதன் காரணமாக தான் அனல் காற்று வீசுகிறது’ என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
பானி புயல் வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஒடிசா மாநிலம் பூரி அருகே கோபால்பூர்-சாண்ட்பாலி இடையே 3-ந் தேதி (இன்று) பிற்பகலில் கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 170 கிலோ மீட்டர் முதல் 180 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் வெப்பசலனம் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து தான் காணப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.