தமிழகத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் இன்று 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 61 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று திங்கட்கிழமை ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், உயிரிழந்தோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 44 பேருக்கும் தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்து 783 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தமாக பாதித்தோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயர்ந்துள்ளது. இதில் 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 571 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.