Main Menu

ட்ரம்ப்பை கொலை செய்ய ஈரான் சதி: அமெரிக்க ஊடகச் செய்தியால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதி திட்டம் தீட்டியிருந்தது குறித்து சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் கிடைத்ததாக சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அந்தச் செய்தியில், “ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அமெரிக்க அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் வந்துள்ளது. அதில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தாக்குதலில் ஈடுபட்ட 20 வயது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸுக்கும் ஈரானிய சதிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா என்பது இன்னும் தெரியவில்லை என அச்செய்தியில் கூறப்படுள்ளது.

இதற்கிடையில் சதி குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது ஆதாரமற்ற, ஈரானுக்கு களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஐ,நாவுக்கான ஈரானின் செய்தித் தொடர்பாளர், “ஈரான் நாட்டின் பார்வையில் ட்ரம்ப் ஒரு குற்றவாளி. ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்காக அவர் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர். ஈரான் ட்ரம்பை சட்டத்தின் வழியில் சந்திக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பென்சில்வேனியா மாநாட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே சதித் திட்டம் தொடர்பான எச்சரிக்கை கிடைத்தது. அது ட்ரம்ப் பேரணி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் ட்ரம்ப் பேரணி ஒருங்கிணைப்புக் குழு தங்களுக்கு சதி பற்றி ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது” என்றார்.

ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி படுகொலைக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். அதிலிருந்தே ட்ரம்புக்கு ஈரான் அச்சுறுத்தல் இருக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். இதனை ஒட்டியே ட்ரம்ப் பொதுவெளிப் பிரச்சாரங்களில் கவனமாக இருக்கும்படியும், முடிந்தால் தவிர்க்கும்படியும் எச்சரிக்கப்பட்டதாக ரகசிய சேவை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருப்பினும் இத்தனை அச்சுறுத்தல் இருந்தும் கூட ட்ரம்ப் பென்சில்வேனியா பேரணியின் போது அருகிலிருந்த உயரமான கட்டிடத்தின் மீது 20 வயது இளைஞர் ஏறிச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு பாதுகாப்பில் இருந்த சுணக்கமே காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக் கிழமை பென்சில்வேனியாவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இந்தத் தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. “எங்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டு; ஆனால், நாங்கள் எதிரிகள் அல்ல” என்று ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பகிரவும்...