ஜேர்மனியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்ளுக்கு கொரோனா
ஜேர்மனியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனமான டோனிஸில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் 6,500 ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்துமாறு உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஜேர்மனியில் அதிபர் அங்கலா மேர்க்கெல் நீண்ட காலமாக முடக்க நிலையை தொடர்வதற்கு விரும்பிய போதும் பிராந்திய முதல்வர்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.
ஐரோப்பாவில் கொரோனா தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்ட ஜேர்மனியில் இவ்வாறான இறைச்சி விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டடிதை அடுத்து கொரோனா தொற்று பரவல் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.
சில நிறுவனங்களில் ஊழியர்கள் ஒரே இடங்களில் தங்குவதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜேர்மனியில் இதுவரை 1 இலட்சத்து 91 ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 8 ஆயிரத்து 961 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.