ஜனாதிபதி தலைமையில் 762 சிறைக்கைதிகள் விடுதலை!
குற்றங்கள் அதிகரிப்பதற்கான சமூக சூழ்நிலைகளை மாற்றியமைப்பதற்கு தான் அதிக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் பொது மன்னிப்பு வழங்கலின் கீழ் 762 சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு இன்று (18) முற்பகல் வெலிக்கடை சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்விற்கு ஜனாதிபதி ஒருவர் கலந்துகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாவதுடன், சிறைச்சாலை வளாகத்திற்குள் சிறைக்கைதிகள் முன்னிலையில் உரையாற்றிய முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். அத்துடன் சிறைக்கைதிகளின் கோரிக்கைகளையும் ஜனாதிபதி அவர்கள் செவிமடுத்தார்.
26 பெண் கைதிகள் உள்ளிட்ட 762 சிறைக்கைதிகள் இன்று விடுதலை பெற்றதோடு, தன்னிடமிருந்து விடுதலை கடிதங்களை பெற்றுக்கொண்ட சிறைக்கைதிகளிடம் அவர்கள் பற்றிய விபரங்களையும் ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்தார். இன்று பெற்ற விடுதலையினூடாக தத்தமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக அமைத்துக்கொள்ளுமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று விடுதலை பெற்றவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்குள் வருவதை தான் காண விரும்பிவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இன்றைய தினம் விடுதலை பெற்ற அனைவரினதும் எதிர்காலத்தை கட்டியெழுப்ப தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இன்றைய தினம் விடுதலை பெற்றவர்களிடையே சுயதொழிலில் ஈடுபட விரும்பும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பாகவும் கண்டறிந்து அது தொடர்பிலான அறிக்கை ஒன்றையும் துரிதமாக தன்னிடம் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
சிறைக்கைதிகளை சிறந்த பிரஜைகளாக சமூகமயமாக்குவது தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவதாகவும் தன்னை கொலை செய்ய முயன்று நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபரை கடந்த 2016 ஜனவரி மாதம் 08ஆம் திகதி அன்று விடுதலை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சிறைச்சாலையை நிரப்புவது தனது நோக்கமல்ல எனவும் அனைத்து பிரஜைகளையும் சிறந்த பிரஜைகளாக சமூகமயப்படுத்தலும் நாட்டினுள் குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமையும் சமூக பின்புலத்தை மாற்றியமைப்பதுமே தனது நோக்கமாகுமெனத் தெரிவித்தார்.
சிறைக்கைதிகளுக்கு தொழிற் பயிற்சியை வழங்குதல் உள்ளிட்ட அவர்களது அறிவையும் உழைப்பையும் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தான் சிறைக்கைதியாக கழித்த நாட்களின் அனுபவங்களையும் நினைவுகூர்ந்ததுடன், சிறைச்சாலையில் நாட்களை கழிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தத்தமது வாழ்க்கையை மறுசீரமைத்துக் கொள்வதற்காக உறுதிப்பாட்டுடன் அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
விடுதலை பெறும் 05 கைதிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் சுய தொழிலுக்கான உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
சிறைக்கைதியான லக்மின இந்திக பமுனுசிங்க ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.
சிறைச்சாலையில் இருந்தவாறே சமூக விஞ்ஞான முதுமானிப் பட்டப்படிப்பை நிறைவு செய்து களனி பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன், 2005ஆம் ஆண்டு இலங்கை குத்துச் சண்டை மெய்வல்லுனராக முடிசூட்டிய அவர், இவ்வருட தேசிய குத்துச் சண்டை மெய்வல்லுனர் போட்டியிலும் கலந்துகொள்ள எண்ணியுள்ளார்.
தனது பட்டப்படிப்புக்குத் தேவையான செயற்திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு தேவையான நிதியுதவியை வழங்குமாறும் மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பளிக்குமாறும் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தார், செயற்திட்ட அறிக்கைக்கு தேவையான பணத்தை துரிதமாக வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், போட்டியில் கலந்துகொள்வதற்கான சாத்தியங்கள் தொடர்பில் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலாதா அத்துகோரலவிடம் பணிப்புரை விடுத்தார்.
அமைச்சர் தலதா அத்துகோரல உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் பதிற் கடமை செயலாளர் பியுமந்தி பீரிஸ், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே.டப்ளியு.தென்னகோன் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சிறைக்கைதிகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்களுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பௌத்த சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் அன்னதான நிகழ்வை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அவர்கள், இன்றைய தினம் விடுதலை பெற்ற சிறைக்கைதிகளுக்கான விருந்துபசார நிகழ்விலும் கலந்துகொண்டார்.