ஜனாதிபதியின் தீர்மானங்கள் முரண்பாடாகவே உள்ளன: டிலான் பெரெரா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிவிலிருந்து காப்பாற்றும் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டுமானால் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான முகாமுடன் சுதந்திரக் கட்சியை இணைக்கவேண்டும் என்று சுதந்திரக் கட்சியிலிருந்து அண்மையில் விலகி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரெரா தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை மயானத்தை நோக்கி கொண்டு செல்லமாட்டார் என்று நம்புகின்றோம் என்றும் டிலான் பெரெரா குறிப்பிட்டார்.
சுதந்திரக் கட்சியிலிருந்து அண்மையில் விலகி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்ட டிலான் பெரெரா எம்.பி. யிடம் அதற்கான காரணம் குறித்து வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் விடயம் குறித்து சுதந்திரக் கட்சி சரியான முடிவை எடுக்கும் என்று ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதிவரை காத்திருந்தோம். காரணம் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக சரியான வேட்பாளரை களமிறக்கவேண்டிய தேவை காணப்பட்டது. ஆனால் சுதந்திரக் கட்சி இந்த விடயத்தில் காலத்தை கடத்திக்கொண்டு இருந்ததே தவிர முடிவெடுக்கவில்லை.
ஆனால் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதியின் பின்னர் நாங்கள் மெளனமாக இருக்க முடியாது. எமது ஆசனத்தில் மக்கள் எம்மிடம் கேள்வியெழுப்ப ஆரம்பித்துவிட்டனர். எமது முடிவு என்ன என்பது குறித்து வினவத் தொடங்கிவிட்டனர். எனவே நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டியேற்பட்டது.
விலகும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது
சுதந்திரக் கட்சியை விட்டு விலகுவோம் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் அந்த முடிவை எடுப்பதற்கான நிர்ப்பந்தத்தை சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் ஏற்படுத்திவிட்டனர். நாட்டு மக்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதனை தேடிப்பார்க்கவேண்டும். அதனை கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளில் நாங்கள் நன்றாகவே கண்டோம். எனவே தற்போது ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் நாங்கள் தொடர்ந்தும் முடிவெடுக்காமல் காத்துக்கொண்டிருக்க முடியாது. அதனால்தான் கோத்தாவை ஆதரிக்க தீர்மானித்தோம். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு 14 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. அதிலும் அதிகமான வாக்குகள் தற்போது கட்சியினால் இழக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
முரண்பாடான தீர்மானங்கள்
எனவே தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைந்து ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டியுள்ளது. கடந்த காலங்களில் நாங்கள் அவருடன் இருந்தோம். அவரின் முடிவுகளை ஆதரித்தோம். ஆனால் சில நேரங்களில் தலைவரின் முடிவு நெருக்கடியை கொடுத்தது. ஒக்டோபர் 26 ஆம் திகதி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது நாம் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சித்தோம். எனினும் அப்போது திடீரென்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதனால் அந்த முயற்சியில் எம்மால் வெற்றிபெற முடியவில்லை.
ஐ.தே.க. வுக்கு எதிரான முகாம்
இவ்வாறு பல தீர்மானங்கள் நெருக்கடியை கொடுத்துள்ளன. எனவே தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவாக ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும். ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான முகாமுக்கு தனது ஆதரவை வெ ளிப்படுத்தவேண்டும். சுதந்திரக் கட்சி தற்போது பலவீனமடைந்து செல்கின்றது. எனவே கட்சியை காப்பாற்றவேண்டிய தேவை உள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிவிலிருந்து காப்பாற்றும் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டுமானால் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான முகாமுடன் சுதந்திரக் கட்சியை இணைக்கவேண்டும். ஜனாதிபதி அந்த முடிவை விரைவில் எடுக்கவேண்டும்.
கட்சியை காப்பாற்றுங்கள்
இக்கட்டான தற்போதைய சூழலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை மயானத்தை நோக்கி கொண்டு செல்லமாட்டார் என்று நம்புகின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏதோவொரு வகையில் தொடர்ந்து அரசியலில் இருக்கவேண்டும். அவருடைய அரசியல் வகிபாகம் இந்த நாட்டுக்கு தொடர்ந்து தேவைப்படுகின்றது. எனவே அதற்கு ஏற்றவகையிலான தீர்மானத்தை எடுப்பார் என்று நம்புகின்றோம் என்றார்.