ஜனாசா எரிப்பிற்கு எதிராக வவுனியாவில் வெள்ளைத்துணி போராட்டம்
முஸ்லீம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக வெள்ளைத்துணி கட்டும், கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
வவுனியா மன்னார் பிரதான வீதி பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம், சுனாமி பேரவையில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதன் பின்னர் கொரோனா சுகாதார நடைமுறைகளை பேணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அடக்கம் என்பதே உலகநியதி எரிப்போம் என்பதே உன் வியாதி’, ‘எரிக்காதே எரிக்காதே ஜனசாக்களை எரிக்காதே’, ‘மண்ணை விட மருத்துவம் எதுவுண்டு’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பல்வேறு சுலோகங்களை தாங்கி இருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சமத் மௌலவி, வவுனியா நகரசபை உறுப்பினர்களான ரசூல் லறீப், அப்பதுல் பாரி, பாயிஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மௌலவிமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.