சம்பிக ரணவக்க கைதானமை திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் : திஸ்ஸ அத்தநாயக்க
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் பழிவாங்கல் என்பது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது.
இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் சர்வ மதத் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இவற்றுக்கு எதிராக ஆரம்பத்திலேயே குரல் கொடுக்காவிட்டால் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்வதைத் தவிர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இன்று திஸ்ஸ அதனாயக்கவின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :
கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பிலேயே சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்டிருக்கிறார். இது ஏற்கனவே சட்ட ரீதியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்த ஒரு விடயமாகும். எனினும் அரசியல் பழிவாங்கலை நோக்கமாகக் கொண்டே தற்போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவ்விடயம் தொடர்பில் சர்வ மதத் தலைவர்கள் உள்ளிட்ட முழு நாடும் கவனம் செலுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். அவ்வாறில்லையெனில் தொடர்ந்து இடம்பெறக் கூடிய அரசியல் பழிவாங்கல்களை தவிர்க்க முடியாமல் போகும்.
மக்கள் அரசாங்கத்தை நியமிப்பது அரசியல் பழிவாங்களுக்காக அல்ல. அரசாங்கத்திற்கென நியாயபத்திரமொன்று காணப்படுகிறது. அதற்கேற்பவே அவர்கள் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் அடுத்தடுத்த அரசாங்கங்களும் இவ்வாறே செயற்பட நேரிடும்.
இதன் போது சஜித் பிரேமதாசவுக்கு கட்சி தலைமைத்துவத்தை வழங்குவது தொடர்பில் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த திஸ்ஸ அதனாயக்க கூறியதாவது :
ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என்பதே கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே இவ்விடயம் தொடர்பில் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் நேரடியாக சந்தித்து பேசி தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தமைக்கான காரணிகளை கண்டறிந்து குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும். இல்லையெனில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடுவதோடு கட்சி ஆதரவாளர்களும் இரு தரப்பினராகப் பிரிந்து விடுவர் என அவர் இதன்போது தெரிவித்தார்.