கொவிட்-19 தடுப்பூசி தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!
உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகநாடுகள் கடுமையாக போராடி வருகின்ற நிலையில், இதுதொடர்பான முக்கிய அறிவிப்பொன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பரவலான பயன்பாட்டை எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ், நேற்று (வெள்ளிக்கிழமை) ஜெனீவா நகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை வெளியிட்டார்.
இதன்போது அவர் கூறுகையில், ‘கொவிட்-19 நோய்த்தொற்றுக்கான பல்வேறு தடுப்பூசிகள், உலகின் பல பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், அவற்றில் எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை தனது மூன்றாவது கட்ட பரிசோதனை நிலையில் கூட திருப்திகரமான செயற்திறனை இதுவரை வெளிப்படுத்தவில்லை.
கொவிட்-19 நோய்த்தொற்றைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அந்த தடுப்பூசிகளுக்கு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள அளவீடுகளை அவை 50 சதவீதம் கூட எட்டவில்லை.
எனவே, கொவிட்-19 தடுப்புசி பரவலாக பயன்படுத்தும் சூழலை அடுத்த ஆண்டு மத்திக்குள் எதிர்பார்க்க முடியாது. கொவிட்-19 தடுப்பூசிகள் எந்த அளவுக்கு நோய்த்தடுப்பு ஆற்றலை ஏற்படுத்துகின்றன என்பதையும், அது மனிதர்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். எனவே, அந்த மருந்துகளின் மூன்றாவது கட்ட சோதனைகளை நிறைவு செய்ய நீண்ட காலம் பிடிக்கும்’ என கூறினார்.
தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அவை பல்வேறு கட்டங்களாக மனிதர்களின் உடலில் செலுத்தி சோதித்துப் பார்க்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக கொவிட்-19 தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யாவின் செஷெனோவ் பல்கலைக்கழகம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. எனினும், இதுதொடர்பாக நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.