கொவிட் 19 சவால்களுக்கு வெற்றிகரமாக முகங் கொடுத்த இலங்கைக்கு நோர்வே பாராட்டு!
கொவிட் 19 சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்த நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும் அந்த சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கேடல் தெரிவித்தார்.
இன்று (வியாழக்கிழமை) முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை நாடாளுமன்றத்தில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் கொவிட் 19 பாதிப்பை குறைத்துள்ளதால் தனக்கும் முகக் கவசம் இன்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுவரை 140 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் நோர்வேயிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும்இ தொடர்ந்தும் இந்நாட்டுக்கு முதலீடுகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்தார்.
அதேபோன்று இலங்கையின் கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் தமது சேவைகளை நோர்வே நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாக தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இந்த நிலைமை மேலும் விருத்தியடையும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க மற்றும் நோர்வே தூதரக பிரதி தலைமை அதிகாரி ஹில்டே பேர்க்-ஹன்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.