கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் – இலங்கை ராணுவ தளபதி
கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் என்று இலங்கை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. அதில் 265 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில் இலங்கை ராணுவத்தின் தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயகே ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
ஈஸ்டர் பண்டிகை அன்று ஏப்ரல் 21-ந்தேதி இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெப்பு சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் காஷ்மீர், கேரளா ஆகிய மாநிலங்களிலும், பெங்களூருவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அங்கு அவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இதை இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன. இந்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.
பயங்கரவாத தடுப்பு நிறுவனங்களான தேசிய புலனாய்வு நிறுவனம் போன்ற அமைப்பினர் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அங்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என சந்தேகப்படும் பலரை இங்கு கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, கடந்த 2017-ம் ஆண்டில் தற்கொலை படை பயங்கரவாதிகள் 2 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை என தெரிவித்தார்.
இலங்கை ராணுவ தலைமை தளபதியின் இந்த பேட்டிக்கு இந்திய உள்துறை அமைச்சகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த விவகாரம் குறித்து இலங்கை எங்களிடம் எந்தவித தகவலும் பகிர்ந்து கொள்ளவில்லை. முக்கியமாக இலங்கை பாதுகாப்பு நிறுவனங்கள்தான் விசாரணைக்கு பிறகு அதை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றார்.
அதேநேரத்தில் இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்திய பயங்கரவாதிகளுக்கு காஷ்மீருடன் தொடர்பு இருந்ததாக இந்திய புலனாய்வு துறையினர் இதுவரை குறிப்பிடவில்லை. இருந்தாலும் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட இலங்கையின் தேசிய நவ்ஹீத் ஜமாத் தலைவரும், மத போதகருமான மவுலவி ஷக்ரான் பின் ஹாசிம் இந்தியா வந்து சென்று இருக்கலாம் என இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் ஹாசிம் இந்தியா வந்து சென்றதற்கான காரணம் குறித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் யாரை சந்தித்தார் என்ற விவரங்களை அளிக்கவும் அவர் மறுத்துவிட்டார். இந்த அமைப்பு இதுவரை எந்த பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆனால் அவர் உருவாக்கிய தேசிய தவ்ஹீத் ஜமாத் இலங்கையில் வன்முறையை தொடங்கிவிட்டது என்றும் அதிகாரி கூறினார்.