குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்ப்பெற்ற குருவாயூர் கோவிலில் இன்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
இரண்டாவது முறையாக பிரதமர் மோடி அமோக வெற்றிப் பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். இதையடுத்து கேரள மாநிலத்தில் உள்ள புகழ்ப்பெற்ற குருவாயூர் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் நடத்த பிரதமர் மோடி இன்று காலை கொச்சி வந்தடைந்தார்.
கொச்சி விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை அம்மாநில ஆளுநர் சதாசிவம், மத்திய மந்திரி முரளிதரன், மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
கொச்சியில் இருந்து தி்ருச்சூர் சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய குருவாயூர் கோவிலுக்கு தற்போது வந்துள்ளார். அவருடன் ஆளுநர் சதாசிவமும், பாஜக மூத்த தலைவர்களும் வருகை தந்துள்ளனர்.
அங்கு தனது எடைக்கு எடை துலாபாரத்தில் தாமரை மலர்களை கொடுக்க உள்ளார். இதற்காக 112 கிலோ தாமரை பூக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கோவிலில் தரிசனம் செய்த பின்னர், குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிய வந்துள்ளது.