கிளிநொச்சி மற்றும் மன்னாரிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.
இதன்போது காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களையும் வாசகங்களையும் ஏந்தியவாறு ஏ9 வீதியில் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது பிள்ளைகளின் நிலை தொடர்பில் சர்வதேசமே தீர்வை பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதேநேரம் மன்னாரிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தால் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தரக்கோரியும் காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச விசாரனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுமே உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மன்னார் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா, “நாங்கள் தொலைத்தது விலை மதிக்க முடியாத எமது உறவுகளை. அவர்களை தொலைத்துவிட்டு இன்று அவர்களை நாங்கள் தேடிக்கொண்டு வீதிகளில் நிற்கின்றோம்.
எனவே சர்வதேச விசாரனை வேண்டும் என்றே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் கேட்கின்றோம்” என தெரிவித்தார்.
பகிரவும்...