ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி
இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் (Antonio Guterres) அவர்கள் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு விசேட தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு வழங்க முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி அவர்களிடம் உறுதியளித்த ஐ.நா பொதுச் செயலாளர், இந்த தாக்குதல் சம்பவத்தில் பலியான அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
இதேநேரம் பாகிஸ்தான் ஜனாதிபதி கலாநிதி ஆரிப் அல்வி (Arif Alvi) மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசேப் தயிப் எர்டோகான் (Recep Tayyip Erdogan)ஆகியோரும் நேற்று ஜனாதிபதி அவர்களுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, தமது கவலையை தெரிவித்ததுடன், பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கட்டார் அதிபர் சேக் தமிம் பின் அஹமட் அல்தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) ஆகியோரும் ஜனாதிபதி அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தமது கவலையை தெரிவித்ததுடன், இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் தாம் இலங்கையுடன் கைகோர்த்திருப்பதாகவும் குறிப்பிட்டனர்.