என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது – டிரம்ப்
தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கிய டொனால்டு டிரம்ப்பை வெற்றி பெறவைப்பதற்காக ரஷியா உதவியதாக புகார் எழுந்தது. இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜனநாயக கட்சியினர் அழுத்தம் கொடுத்தனர்.
அதன்பேரில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு குழுவின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. சுமார் 2 ஆண்டு காலம் தீவிர விசாரணைக்கு பிறகு முல்லர் தலைமையிலான விசாரணைக்குழு தன்னுடைய அறிக்கையை, அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் தாக்கல் செய்தது.
அதன் பின்னர் அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார், அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி டிரம்ப் குற்றமற்றவர் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் ஜனநாயக கட்சியினரோ, முல்லரின் அறிக்கையை முழுமையாக வெளியிடாமல் டிரம்பை குற்றமற்றவர் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.
எனவே விசாரணை குழுவின் முழுமையான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி 448 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், “2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, தற்போதைய ஜனாதிபதி டிரம்போ அவரது பிரசார குழுவை சேர்ந்தவர்களோ ரஷியாவுடன் சேர்ந்து சதி செய்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என தெரிவிக்கப்பட்டது.
மேலும், விசாரணை குழுவில் இருந்து முல்லரை நீக்க வெள்ளை மாளிகை வக்கீலுக்கு டிரம்ப் உத்தரவிட்டதாகவும், ஆனால் அதில் உடன்பாடு இல்லாததால் வெள்ளை மாளிகை வக்கீல் பதவி விலகியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் டிரம்ப் விசாரணையை தடுக்க முயன்றாரா என்பது பற்றி உறுதியான சட்டமுடிவை எட்ட முடியவில்லை என ராபர்ட் முல்லர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, விசாரணைக்குழுவின் அறிக்கையின் மூலம் டிரம்ப் விசாரணையை தடுத்து நிறுத்த பல்வேறு வகையில் இடையூறு அளித்தது தெரியவந்திருப்பதாக கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் அழுத்தம் கொடுத்தனர். நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக இருக்கும் நியூயார்க் எம்.பி. ஜெர்ரி நாட்லர் இதுபற்றி கூறுகையில், “ஜனாதிபதி நீதிக்கு தடை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டால், அவர் பதவி நீக்கப்படலாம்” என கூறினார்.
மேலும், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் பேதங்களை புறம் தள்ளிவிட்டு, அரசியலமைப்பு கடமையை ஆற்றவேண்டும். அதாவது தவறான முன் உதாரணமாக இருக்கும் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என எலிசபெத் வாரன் உள்ளிட்ட ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தன்னை பதவி நீக்கம் செய்யக்கோரும் ஜனநாயக கட்சியினரின் கோரிக்கைக்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
மிகப்பெரிய குற்றங்கள் மற்றும் தவறான நடவடிக்கைகளுக்காக மட்டுமே ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய கோர முடியும். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. எனவே என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது.
குடியரசு கட்சி ஜனாதிபதி குற்றவாளி அல்ல. ஜனநாயக கட்சியினர் தான் குற்றவாளி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.