ஊடகங்களே..! இனவாதக் கருத்துக்களை பரப்புவதை தவிருங்கள்: அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம்

இந்நாட்டில் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்காக குறிப்பிட்ட சில ஊடகங்கள் இனவாதக் கருத்துக்களை பரப்பி மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இவர்களது பொய்ப்பிரசாரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்டத் துறையினர் ஆராய்ந்து அவை உண்மைக்குப் புறம்பான செய்திகள் என தெட்டத் தெளிவாக எடுத்தியம்பிய போதிலும் கூட அதைக் கூட அவ்வாறான ஊடகங்கள் மூடி மறைக்கின்ற செயற்பாடுகளையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன என்று முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
கல்ஹின்ன பட்டகொல்லாதெனிய ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 230 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா அதிபர் ஏ.ஏ.எம். இக்ராம் தலைமையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் வைத்தியர் சாபி ஆகியோர்களுக்கு முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மைக்குப் புறம்பான விடயமென தெளிவுபடுத்தப்பட்ட போதிலும் கூட அந்த மனப்பாங்கை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனோநிலை அந்த ஊடகங்களுக்கு இல்லை.
முஸ்லிம்களாகிய நாம் இன்று சோதனையும் வேதனையும் நிறைந்த கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், கலாசார உடைகள் தொடர்பாக பெரும்பான்மையினர்கள் பேசி வருகின்றனர். பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அரசாங்க அலுவலகங்களில் சேவையாற்றுகின்ற பெண்களுடைய உடை சம்பந்தமாக கடந்த காலங்களில் பல பிரச்சினைகள் எழுந்தன.
இதனால் நாம் சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின் றோம். இந்நிலை தொடரக்கூடாது. அத்து டன் ஊடகங்களும் இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதேவேளை, மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மத்திய அரசாங்கத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டம் இருக்கவில்லை. தேசிய பாடசாலைக்கு மட்டுமே மத்திய அரசாங்கத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படுகிறது. எனினும், மாகாண சபையின் மூலம் மாகாண சபை பாடசாலைகளுக்கு நிவர்த்தி செய்து கொள்ள முடியாத துர்ப்பாக்கியமான நிலைமை காணப்பட்டது. நான் மாகாண சபையில் நீண்ட காலமாக அமைச்சராக இருந்த காலகட்டத்தின் அனுபவத்தை அறிந்து இந்த குறைபாடு தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தேன். எனினும் கடந்த காலத்தில் தேசிய பாடசாலைக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடுகளை செய்து வந்தன.
இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி உருவாக்கப்பட்ட பிற்பாடு மத்திய அரசாங்கத்திலிருந்து மாகாணப் பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாதிருந்த தடை இல்லாமல் செய்யப்பட்டு இன்று மத்திய அரசாங்கத்திலிருந்து மாகாண மட்டப் பாடசாலைகளுக்கும் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த மாகாண மட்டப் பாடசாலைக்கு பாரிய நிதியை நாங்கள் பெற்றுக் கொண்டுள்ளோம். மத்திய அரசாங்கத்திலிருந்து நீண்ட காலமாக இருந்து வந்த மாகாணப் பாடசாலைக்கு நிதி ஒதுக்கப்பட முடியாத முட்டுக் கட்டை நிறைவுக்கு வந்துள்ளது.
பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த எல்லாக் காலத்திலும் கல்விச் சேவைக்காக பாரிய நிதி உதவியை செய்து வருகின்றது. சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அறிமுகப்படுத்திய இலவசக் கல்விமுறையை வலுவூட்டுவதற்காக வேண்டிய பல கல்விச் சேவைகள் ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டன. இலவசப் பாடப் புத்தகம் விநியோகம், மதிய போஷாக்கு உணவுத் திட்டம், இலவசக் காப்புறுதித் திட்டம், உயர்தர மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கும் திட்டம் போன்ற பல வேலைத் திட்டங்களை உருவாக்கி கல்வியில் மறுமல ர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் உப தவிசாளர் ரசான், பிரதேசசபை உறுப்பினர் கலீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.