உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார் – முதல்வர் பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுகவுக்கு துரோகம் செய்து சிலர் வெளியே சென்றதால், இந்த இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் தோல்வி பயம் காரணமாகவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வருகிறார். 3 எம்எல்ஏக்களுக்கும், ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம். இதன் மூலம் தி.மு.க., அ.ம.மு.க.வுக்கு இடையேயான உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தமிழகத்தில் 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயார். உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு நேரத்தில் தி.மு.க. தான் நீதிமன்றத்திற்கு சென்று தேர்தலை நிறுத்தியது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி மாணவர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கவில்லை. திறமை அடிப்படையில் டெல்லியில் தமிழர்கள் இடம் பெறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.