ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து எவரும் சந்தேகப்படத் தேவையில்லை- சரத் வீரசேகர
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விரைவிலேயே விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து சூத்திரதாரிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் இதுதொடர்பாக எவரும் சந்தேகம்கொள்ளத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சட்டமா அதிபர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். இதில் பொலிஸாரின் விசாரணைகளில் சில குறைபாடுகள் உள்ளமையால், இதுதொடர்பாக வழக்குத் தாக்கல் செய்ய முடியாத நிலைமைக் காணப்படுவதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த சட்டமா அதிபர், புலனாய்வுப் பிரிவினருக்கு தாக்குதல் நடத்தப்படவிருந்த திகதி, நேரம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் இதன் பின்னணியில் பாரிய சதித்திட்டம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த சதித் திட்டத்தின் பிரதான சூத்திரதாரியாகவும் பயங்கரவாதக் குழுவின் தலைவராக நௌபர் மௌலவி என்பவர் குற்றஞ்சாட்டப்பட்டாலும், இதற்கான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனவும் கூறியிருந்தார்.
வெளிநாட்டு சக்திகளுக்கும் இதனுடன் தொடர்புள்ளதா என்பது இன்னும் வெளிக்கொண்டுவரப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நாம் அரசாங்கம் எனும் வகையில், அனைவரது வேண்டுகோள்களையும் மதிக்கின்றோம்.
30 வருட கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த நாம், இனியும் நாட்டில் தீவிரவாதத்திற்கோ பயங்கரவாதத்திற்கோ ஒருபோதும் அனுமதியளிக்கப்போவதில்லை.
ஈஸ்டர் தாக்குதல்தான் கடந்த காலங்களில் உலகிலேயே நடத்தப்பட்ட மிகவும் மோசமான பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படுகிறது. நாம் எப்.பி.ஐ. மற்றும் அவுஸ்ரேலியன் பெடரல் பொலிஸாருடன் இணைந்து தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகிறோம்.
2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியான கலிட் செயிக் மொஹமட் இன்னமும் விளக்கமறியலில்தான் உள்ளார்.
அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. அதேபோன்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரதான குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யவும் பல வருடங்கள் சென்றன.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய மூன்று வருடங்கள் சென்றன.
தளதா மாளிகை மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய 7 வருடங்கள் சென்றன. இவ்வாறான தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக சூட்சமமான முறையில் தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாலேயே, வழக்குத் தாக்கல் செய்ய காலம் எடுக்கின்றது.
அவ்வாறானவர்களை சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி தப்பிக்க வைக்கக்கூடாது என்பதற்காகவே, விசாரணைகளை தீவிரப்படுத்துகிறோம்.
இந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை 32 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதை நாம் சபையில் தெரியப்படுத்துகிறோம்.
சாட்சிகளை நாம் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சில சாட்சியங்களை இரசாயணப் பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
இவ்வாறான வழிமுறைகள் இருப்பதால்தான் வழக்குத் தாக்கல் செய்ய சிறிது காலம் எடுக்கின்றது. இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து விரைவில் அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்வோம்.
இதுவரை 704 பேர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகள் மற்றும் அமெரிக்காவின் விசாரணைகளுக்கு இணங்க, நௌபர் மௌலவியே தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஐ.எஸ். பயங்கரவாத சிந்தனையை முதன் முதலில் இலங்கைக்குக் கொண்டுவந்து, 2016 ஆம் ஆண்டு சஹ்ரானை அந்தச் சிந்தனைக்குள் கொண்டுவந்தவர் இவர்தான்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் பயிற்சிகளுக்கு இங்குத் தலைமைத் தாங்கியவரும் இவரே. நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை பயிற்சி நிலையங்களின் தலைமையாகவும் இவர் செயற்பட்டு வந்துள்ளார்.
இவர்தான் ஈஸ்டர் தாக்குதலின் பிரதானி என எப்.பி.ஐ.உம் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு, இந்தத் தாக்குதலில் வெளிநாட்டவர்களுக்கும் தொடர்புள்ளது.
அந்தவகையில், இலங்கையுடன் தொடர்புடைய அவுஸ்திரேலிய பிரஜையொருவர் கட்டாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று, மாலைதீவு பிரஜைகள் நால்வரையும் கண்டறிந்துள்ளோம். இவை தொடர்பாக நாம் தேசிய மற்றும் சர்வதேச புலனாய்வாளர்களுடன் இணைந்து தீவிரமான விசாரணைகளை நடத்திக் கொண்டுதான் வருகிறோம்.
எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை” என மேலும் தெரிவித்தார்.