ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை தற்போது நாடாளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அறிக்கையின் சில பக்கங்களை எதிர்க்கட்சி நாடாமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இவ்வாறு வெளியிட்ட பதிவில், ஆணைக்குழுவால் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக தண்டனைச் சட்டத்தில் எந்தவொரு பொருத்தமான ஏற்பாட்டின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக சட்டமா அதிபர் பரிசீலிக்க வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.