ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுவரும் கடுமையான பொருளாதார தடையானது, தமது நாட்டையும், மக்களையும் பெருமளவில் பாதித்து வருவதாக ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
கடந்த 1980 ஆம் ஆண்டு ஈரான் – ஈராக் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், ஈரான் அடைந்த பின்னடைவு நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த நெருக்கடியான நிலையில் இருந்து ஈரானை மீட்டெடுப்பதற்கு அமெரிக்காவிற்கு எதிராக சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கோரியுள்ளார்.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பேச்சு வார்த்தை ஈரான் அணு ஆயுத திட்டத்தினை கைவிடுவது குறித்தே அமைய வேண்டும் எனவும் அவர் நிபந்தனை முன்வைத்திருந்தார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தற்போது பொருளாதார தடைகளை மேலும் அதிகரிப்பதுடன் இராணுவ அழுத்தங்களையும் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு ஏற்ற வகையில் பாரசீக குடாவில், அமெரிக்க யுத்த கப்பல்கள் மற்றும் வான்படையினரின் பிரசன்னத்தினை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...