இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம்- இலங்கை மக்களுக்கு சிறிசேனா வலியுறுத்தல்
ஈஸ்டர் தாக்குதலை தொடந்து இஸ்லாமிய மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம் என இலங்கை மக்களுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்புவில் 3 கிறிஸ்தவ தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதேப்போல் 3 நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகம் ஆகியவற்றை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 359 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு தேசிய தவுகித் ஜமாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து சுமார் 75 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் தற்கொலைப்படை தாக்குதல்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 நபர்களின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இலங்கையின் பல பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் மீது மாற்று மதத்தினர் தாக்குதல் நடத்தலாம் என்ற பீதி அங்குள்ள சிறுபான்மை இனத்தவரிடையே நிலவுகிறது.
இந்நிலையில், இஸ்லாமிய மக்கள் அனைவரையும் தீவிரவாதிகள் போல் பார்க்க வேண்டாம் என அதிபர் மைத்ரேயபால சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘எங்கள் மண்ணில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்தும் திறன் அரசுக்கு உண்டு’ என குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையில் சிறுபான்மை இனத்தவராக வாழும் முஸ்லிம் மக்களை பயங்கரவாதிகள் போல் பார்க்காமல், அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்