Main Menu

இந்தோனேசியாவில் கோழிக்குஞ்சுகளை நன்றாக வளர்க்கும் குழந்தைகளுக்கு அரசால் சன்மானம்!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள அரசாங்க ஆரம்ப பாடசாலை மற்றும் இடைநிலை பாடசாலைகளில் கற்கும் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகளை மாகாண நிர்வாகம் விநியோகித்துள்ளது.

இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பமும் நாகரீகமும் பாரிய அளவில் வளர்ந்து கோலோச்சுகின்ற நிலையில், மாணவர்களின் செயற்திறன் மற்றும் பொறுப்புணர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கைத் தொலைப்பேசிகளில் மூழ்கியுள்ள இந்த காலகட்டத்தில் இவ்வாறான சமூக கல்வித்திட்டங்கள் மாணவர்களின் சமூக உணர்வை வலுப்பட்டுத்துகின்றன.

சாதாரண தகவல் தொலைத்தொடர்பு சாதனமாக அறிமுகமான கைத் தொலைபேசி இன்று சகல பணிகளையும் விரல் நுனியில் சாதிக்க வல்லதாக மாறியுள்ளது.

திறன்பேசிகளில் உள்ள கணிணி விளையாட்டுக்களால் பாடசாலை செல்லும் சிறார்கள் அதற்கு அடிமையாகியுள்ளனர். நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் மலையேறி கைத்தொலைபேசிகளை காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிலைமைக்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்கள் மத்தியில் ஜனரஞ்சகமாகியுள்ள சில செயலிகளில் குழந்தைகள் பேசுவதும், நடனம் ஆடும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகின்றன. அந்த அளவிற்கு குழந்தைகளிடையேயும் திறன்பேசி மோகம் தொற்றிக்கொண்டது.

இந்தநிலையில், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாண அரசாங்கம் திறன் பேசிகளுக்கு குழந்தைகள் அடிமையாவதை தவிர்க்கும் புதிய முயற்சியாக பள்ளிக்குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கியுள்ளது.

மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பாண்டங் நகரில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைகளில் பயிலும் சுமார் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்த நகர முதல்வர் டேனியல் கூறுகையில், ‘இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகள் கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவார்கள்.

இணையதளம் மற்றும் திறன்பேசி விளையாட்டுகளில் இருந்து விலகி இருப்பார்கள்.. கோழிக் குஞ்சுகளை வளர்ப்பது மாணவர்களுக்கு மதிப்புமிக்க திறன்களை கற்பிக்கும் மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கும். கோழிக்குஞ்சுகளை நன்கு வளர்க்கும் குழந்தைகளுக்கு சன்மானமும் வழங்கப்படும்’, என்று குறிப்பிட்டார்.

பகிரவும்...
0Shares