Main Menu

இந்திய-சீன எல்லைப் பதற்றத்தைத் தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? – கமல்ஹாசன் கேள்வி

இந்திய-சீன எல்லைப் பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள் என மத்திய அரசிடம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது, தெளிவான சிந்தனை தேவைப்படும்‌ போதெல்லாம்‌, உணர்வுகளைத்‌ தூண்டிவிட்டுத் தப்பிக்க முயல்வதைப் பிரதமரும் அவரது சகாக்களும்‌ நிறுத்த வேண்டும்‌ என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வான்‌ பள்ளத்தாக்கில்‌ நிலவும்‌ பதற்றம்‌ நாடு முழுவதும்‌ எதிரொலிக்கிறது. கல்வான்‌ பள்ளத்தாக்கே இந்தியப் பகுதி இல்லையென சீனா அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்‌ பிரதமர்‌ கூறியிருக்கும்‌ கருத்துகள்‌ ஜூன்‌ 16 மற்றும் 17ஆம் திகதிகளில்‌ இராணுவ அதிகாரிகள், வெளியுறவுத்‌ துறை அமைச்சரின்‌ அறிக்கைகளிலிருந்து முரண்பட்டிருக்கிறது. பிரதமர்‌ பேசி முடித்து 10 மணி நேரம்‌ கழித்து பிரதமர்‌ அலுவலகம்‌ அது அப்படிச் சொல்லவில்லையென விளக்கவுரை கொடுத்துள்ளது.

அதேநேரத்தில்‌ எதிர்க் கட்சிகளின்‌ கேள்விகளும்‌ இதைச்‌சுற்றி நடக்கும்‌ அரசியலும்‌ வீரர்களின்‌ மன உறுதியைக் குலைத்துவிடும்‌ என்று கவலை கொள்கிறது பிரதமர்‌ அலுவலக செய்திக்குறிப்பு.

தெளிவான சிந்தனை தேவைப்படும்‌ போதெல்லாம்‌, உணர்வுகளைத்‌ தூண்டிவிட்டுத் தப்பிக்க முயல்வதைப் பிரதமரும் அவரது சகாக்களும்‌ நிறுத்த வேண்டும்‌. இது ஒருமுறை அல்ல, கடந்த ஆறு ஆண்டுகளில்‌ எந்தவொரு கேள்விக்கும்‌ சரியான பதிலளிக்காமல்‌ உணர்ச்சிகரமாகப் பதிலளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறீர்கள்‌. எதிலும்‌ மக்களின்‌ நன்மைக்கான திட்டம்‌ இல்லாமல், உணர்வுகளைத்‌ தூண்டும்‌ உங்கள்‌ பேச்சுதான்‌ இந்தச் சூழ்நிலையிலும்‌ நடக்கிறது.

கேள்வி கேட்பவர்கள்‌, வீரர்களின்‌ மன உறுதியைக் குறைப்பதற்காகக் கேட்கவில்லை. என்‌ வீரர்களின்‌ பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கேட்கிறேன்‌. இந்த அரசு எல்லையில்‌ நிலவும்‌ பதற்றத்தைத் தணிக்க என்ன செய்யப் போகிறது? வீரர்களைச் சந்தேகப்படாதீர்கள்‌ என்ற பதில்‌ எங்களுக்குத்‌ தேவையில்லை.

இந்திய இராணுவத்தின்‌ வீரத்தையும்‌, தீரத்தையும்‌ நன்கு அறிந்தவர்கள்‌ நாங்கள்‌. ஆனால்‌ அவர்கள்‌ உயிரை வைத்து நீங்கள்‌ அரசியல்‌ விளையாடாமல்‌ பாதுகாக்கவே இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன்‌.

1. இதுவரை இந்தியப் பிரதமர்‌ எவரும்‌ செல்லாத அளவிற்கு அதிக முறை சீனாவுக்குச் சென்று வந்தீர்களே. அப்படியிருந்தும்‌ இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க உங்களால்‌ ஏன்‌ முடியவில்லை?

2. கடந்த ஆண்டு சீன அதிபரை இந்தியாவுக்கு வரவழைத்து, நட்புறவை வளர்க்கப் பேச்சுவார்த்தைகள்‌ நடத்தினீர்களே, அது எதுவும்‌ உதவவில்லையா?

3. நட்புறவை வளர்க்க எல்லா நாடுகளுக்கும்‌ சுற்றுப்பயணம்‌ மேற்கொண்டாலும்‌, உங்களது முயற்சி தோல்விதானா?

பேச்சுவார்த்தைகள்‌ மூலமாகவோ, நட்புறவு மூலமாக நீங்கள்‌ செய்ய வேண்டியதைத்தான்‌ இந்திய இராணுவத்தின்‌ வீரர்கள்‌ உயிரைத்‌ தியாகம்‌செய்து செயற்படுத்துகிறார்கள்‌. அவர்கள்‌ உயிரைப்‌ பாதுகாக்க நீங்கள்‌ என்ன செய்தீர்கள்‌ என்று கேட்கிறேன்‌.

தேசத்தின்‌ பாதுகாப்பைப் பாதிக்காத, அதேநேரத்தில்‌ நடந்த உண்மை நிகழ்வுகளை, பதட்டம்‌ மிகுந்த இந்த நேரத்தில்‌ பகிர்ந்துகொள்வது மக்களிடையே தேவையற்ற வதந்திகள்‌ பரவுவதைத் தடுக்கும்‌. அரசு தயார்‌ நிலையில்‌ இருப்பதை எடுத்துரைக்கும்‌. வரி செலுத்தும்‌ குடிமகனாக இதைக்‌ கேட்பதற்கு அனைவருக்குமே உரிமை உள்ளது.

இராணுவத்தை நம்புங்கள்‌, அவர்கள்‌ பார்த்துக்‌ கொள்வார்கள்‌ போன்ற பொறுப்பிலிருந்து நழுவும்‌ பதிலளிப்புகள்‌ இல்லாமல்‌, ஒரு மிகப்பெரிய தேசத்தின்‌ பிரதமராக, உங்கள்‌ பொறுப்பை உணர்ந்து இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க என்ன செய்யப் போகிறீர்கள்‌ என்று சொல்லுங்கள்‌” என்று கமல்ஹாசன் கேள்விகளைக் கேட்டுள்ளார்.

பகிரவும்...