அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை பதவிக்கு பா.ஜனதாவே காரணம் – திருமாவளவன்
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை பதவிக்கு பா.ஜனதாவே காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை பிரச்சினைக்கு பா.ஜனதாவே காரணம். மத்திய அரசின் தலையீடு இருப்பதால் தான் இரட்டை தலைமை பிரச்சினை வெடித்திருக்கிறது. இரட்டை தலைமை என்பதை டெல்லி தலைமை மற்றும் தமிழகத் தலைமை என்றே புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
மோடியும் அ.தி.மு.க.வை தலைமை தாங்கி வழி நடத்துகிறார் என்பது தான் அவர்கள் மறைமுகமாக சொல்லும் செய்தி. அ.தி.மு.க. சுதந்திரமாக இருக்க வேண்டும். மத்திய அரசின் தலையீடுகள் முறியடிக்கப்பட வேண்டும் என்பது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நான் விடுக்கிற வேண்டுகோள் ஆகும்.
பிரதமர் மோடியை சந்தித்த போது மாநிலப் பிரச்சினைகள் குறித்து பேசியதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதில் நம்பகத்தன்மை இல்லை. அவர் கட்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து தான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் வெறும் கண் துடைப்புக்காக ஏதேதோ கூறுகிறார்.
பாராளுமன்றத்தில் எங்கள் தொகுதி பிரச்சினைகளுக்காக மட்டுமின்றி தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுப்போம். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதிக்கும் ஹைட்ரோ-கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது போன்றவற்றையும் பாராளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியாகத் தான் பார்க்க முடிகிறது. தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்களது சொத்தை விற்று விவசாயிகள் கடனை அடைக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருப்பது பா.ஜனதாவின் விரக்தியை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.