அவுஸ்ரேலியாவில் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத் தீ
அவுஸ்ரேலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் டசின் கணக்கான இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தீயணைப்புப் படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதுடன் பாதுகாப்பு அறிவுறுத்தலையும் விடுத்துள்ளனர். இதன்படி அடுத்த வாரம் வெப்பமான வானிலை அங்கு எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ சௌத் வேல்ஸில் இன்று (சனிக்கிழமை) காலை நிலைவரப்படி பல இடங்களில் காடு மற்றும் புற்களில் தீ ஏற்பட்டதாக என்.எஸ்.டபிள்யூ என்ற கிராமப்புற தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
சிட்னியின் வடமேற்கு புறநகர்ப் பகுதிக்கு அருகே 100,000 ஏக்கர்களில் (156 சதுர மைல்) பரவி வரும் கோஸ்பர்ஸ் மலை நெருப்பை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், வெப்பநிலை உயர்வு மற்றும் மழை வாய்ப்பு இல்லாததால் அடுத்த வாரம் நிலைமைகள் இன்னும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு நீல மலைகள் உட்பட மாநிலத்தின் நடுப்பகுதியிலிருந்து வடக்கு கடற்கரையில் உள்ள பெரும்பாலான தேசிய பூங்காக்கள் தீ அச்சுறுத்தலால் மூடப்படுவதாக NSW சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய அலுவலகம் ருவிற்றரில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நியூ சௌத் வேல்ஸ் மற்றம் குயின்ஸ்லாந்தில் தீ காரணமாக கடந்த ஒரு வாரத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 300 இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து அழிவடைந்துள்ளன.
