அவசரகாலப் பிரமாணங்கள் பற்றிய பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது
அவசரகாலப் பிரமாணங்கள் பற்றிய பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கு சகல கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
அமைச்சர் மனோ கணேசன்
இது தொடர்பான விவாதத்தில் அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றினார். தமிழ், முஸ்லிம், சிங்கள கடும் போக்குவாதத்தை வேரோடு களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். தௌஹீத் ஜமாத் இயக்கத்தை உடனடியாக தடை செய்வது அவசியம். நாட்டில் இனவாதத்திற்கு இடமிருக்கக் கூடாது என அமைச்சர் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல
விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் தற்போதைய நிலையில் அரசியல் இலாபம் கருதாமல் சகலரும் ஒன்றாகப் பணியாற்ற வேண்டும் என்றார்.
இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன
கடும் போக்குவாதத்தைத் தோற்கடிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் என இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும
விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் ஒரு மதத்தின் மீதோ இனத்தின் மீதோ விரல் நீட்டாமல் சகலரும் ஒன்று சேர்ந்து தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம
விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இந்தத் தாக்குதலுக்கான பொறுப்பை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரும் ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன
பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து விட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிநேசன்
பயங்கரவாதத்திற்கும் கடும் போக்குவாதத்திற்கும் துணைபுரியும் சகலரும் கைது செய்யப்பட வேண்டுமென விவாதத்தில் கலந்துக் கொண்டு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா
மக்களது இயல்பு வாழ்க்கையின் பெறுமதியைப் பாதுகாப்பது அவசியம் என தெரிவித்தார்.
அமைச்சர் ராஜித சேனாரத்தன
விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் சர்வதேச பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு சகலரும் முன்னுரிமை அளித்து செய்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைக்கு முகம் கொடுப்பதற்காக தேசிய ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவசர காலச் சட்டம் தொடர்பில் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டார். இந்த சர்வதேச பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு சகலரும் முக்கியத்துவம் அளித்து செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் நிமால் சிரிபால டி சில்வா
தாக்குதலில் பலியானவர்களது குடும்பங்களின் நலன்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென கோரியுள்ளார்.பலியானவர்களுக்கு நட்டஈடு வழங்குவது மாத்திரம் போதுமானதாக அமையாதென விவாதத்தில் கலந்து கொண்ட தெரிவித்தார். பலியானவர்களது குடும்பங்களின் நலன்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அமைச்சர் ஜோன் அமரதுங்க
குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புடைய பலர் தற்சமயம் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த சர்வதேச பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கையுடன் ஒன்றிணைந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் ஒவ்வொருவர் மீது குற்றம் சுமத்துவதில் பலனில்லை. நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல சகரும் ஒன்றிணைய வேண்டுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்
இந்த அனர்த்தத்தை தவிர்க்க முடியாமையானது துரதிஷ்டவசமானது என தெரிவித்தார். எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களை தவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர
இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை மேற்கொள்ளும் அதேசமயம் இந்த பயங்கரவாத நடவடிக்கைகளே இறுதி பயங்கரவாத செயற்பாடுகளாக இருக்க வேண்டுமென தெரிவித்தார். பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பலப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் பழனி திகாம்பரம்
விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர பழனி திகாம்பரம் பயங்கரவாதத்தை தோற்கடிப்பது அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்று குறிப்பிட்டார். எல்ரிரிஈ இயக்கத்தில் கல்வி அறிவு இல்லாத பாமரர்கள் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தினார்கள். இன்று பெறுமதியான கார்களை வைத்திருக்கும் வசதிபடைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். இது கவனிக்கத் தக்க விடயம் என அமைச்சர் மேலும் கூறினார்.
ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா
பாதூகாப்புத்துறை நிலவும் பலவீனங்களை நீக்க வேண்டுமென தெரிவித்தார். கடும்போக்கு குழுக்கள் உருவாவதை தடுப்பதற்கு சட்ட திட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச
நாட்டில் உள்ள கடும்போக்கு இயக்கங்களை தடை செய்ய வேண்டுமென தெரிவித்தார். நாட்டின் எதிர்கால நலன் கருதி சிந்தித்து செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார
விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் சந்தர்ப்பத்தில் அரசியல் இலாபத்தை எதிர்பார்க்கக்கூடாதென கூறினார்.
அமைச்சர் மங்கள சமரவீர
மக்களை பிளவுபடுத்தும் வகைளில்; செயற்படும் குழுக்களை தோற்கடிக்க வேண்டுமென தெரிவித்தார். அரசாங்கம் அமைதியான சுபீட்சமுள்ள நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை பின்நோக்கி திரும்பச் செய்ய எவருக்கும் இடமில்லை. தற்போதைய நிலைமையில் ஊடக நிறுவனங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.
IS பயங்கரவாதிகள் வெளிநாட்டவர்களை கொன்றதன் நோக்கம் உள்நாட்டு சுற்றுலாத்துறையை முடக்குவதல்ல. மாறாக வெளிநாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதுதான் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இது எல்ரிரிஈ இயக்கத்திற்கு எதிராக செய்த யுத்தத்தைப் போன்றதல்ல. சமயப் பித்து தலைக்கேறிய கடும்போக்குவாதிகளுடனான யுத்தமாகும். எனவே இந்த குழுக்களுக்கு ஆயுதமும், ஆட்பலமும் கிடைத்த விதத்தை ஆராய வேண்டுமென அமைச்சர் மேலும் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர
உரையாற்றுகையில் கடும்போக்கு இயக்கங்களை தோற்கடிக்க விரைவில் சட்டங்களை இயற்ற வேண்டுமென தெரிவித்தார். இனவாதத்தை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியமென அவர் கூறினார்.
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ
சமகாலத்தில் முஸ்லிம் சமயம் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்தார். தற்போதைய இடர் நிலைமையில் சிறப்பாக செயற்பட்ட பாதுகாப்பு படையினரை பாராட்ட வேண்டுமென அவர் கூறினார்.
அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன்
இந்தக் காரியத்தை செய்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக செயற்பட்டிருக்கிறார்கள் என் தெரிவித்தார். இஸ்லாத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. அனைவரும் சேர்ந்து பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.2019) தொடர் குண்டு வெடிப்புகளின் கோர வன்முறைகளால் கொல்லப்பட்ட அனைத்து மனித உயிர்களுக்கும் முதலில் நான் அஞ்சலி மரியாதை செலுத்துகிறேன்.தமது உறவுகளை பறி கொடுத்த துயரில் வதைபடும் சகலருக்கும் எனது ஆழ்மன அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு காயப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரும் சுக நலத்துடன் விரைவாக மீண்டு வர வேண்டும் என்றும் நம்பிக்கையுடன் எதிர் பார்க்கிறேன்.
எமது இலங்கைத்தீவு முழுவதுமே எதிர் கொண்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை ஒன்றில், அவசரகால நிலையை பிரகடனப்படுத்த வேண்டியிருப்பதன் அவசியத்தை நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் தவிர்க்க முடியாத இந்த சூழலை நானும் உணர்ந்து கொள்கிறேன்.ஆனாலும் இந்த அவசரகாலச் சட்டமானது எந்த நோக்கத்திற்காக பிரகடனப்படுத்தப்படுகின்றதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
அழகிய எங்கள் இலங்கைதீவு இரத்தத்தீவாக உருவெடுத்திருந்த காட்சிகள் இன்னமும் மறையவில்லை. எமது மக்கள் எதிர்கொண்டிருந்த இழப்புக்களுக்கும் வலிகளுக்கும் வதைகளுக்கும் இரத்தப்பலிகளுக்கும் இன்னமும் உரிய நீதியும் பரிகாரம் தேடப்படவில்லை.இந்நிலையில் எமது மக்களிடமிருந்து மீண்டுமொரு அழுகுரல் ஓலம் இன்று எழுந்திருக்கிறது.
குண்டுத்தாக்குதல்கள் நடந்தப்பட்ட இடங்களில் கொல்லப்பட்ட மக்களில் தமிழர்களே அதிகமானர்களாக இருப்பினும் மனித உயிர்கள் என்ற வகையில் அனைத்து மக்களின் இழப்புக்களுமே சமனானவை. அதேவேளை தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் குறிப்பாக தமிழ் மக்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றார்களா? என்ற சந்தேகமும் இன்று தமிழ் மக்களிடையே எழுந்துள்ளதையும் இச்சபையினுடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன் என்று கூறினார்.
நடைபெற்ற சம்பவங்களில் இளம் குருத்துக்களும் குருதியில் சரிந்து கிடக்கும் காட்சிகள் எமது மனங்களை உலுக்கியிருக்கின்றது. கிறிஸ்தவ மக்களின் புனித நாளொன்றில் நிகழ்ந்த வன்முறை வேள்வி மனித மனங்களையே வதை வதைத்திருக்கின்றது!..யுத்தம் முடிந்து அமைதியாக இருந்த இலங்கைத்தீவின் அழகை இரசிக்க வந்த பெருமளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இதில் பலிகொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
மொத்தத்தில் இந்த வன்முறைகள் இலங்கைத்தீவை மட்டுமன்றி உலக மக்களின் மனங்களையே உலுக்கியிருக்கின்றது. இன்னமும் எங்கு, எப்போது, எது நடக்குமோ என்ற அச்சத்தில் எமது மக்கள் உறைந்து கிடக்கின்றார்கள்.உலகத்தின் பார்வைகள் யாவும் இன்று இலங்கைத்தீவின் பக்கமே திரும்பியிருக்கும் நிலையில், மனிதப் பலிகளை நடத்தும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்புகள் யாவும் அரசாங்கத்தின் கைகளில் மட்டுமே தங்கியிருக்கின்றது. ஆனாலும்இ கொடிய வன்முறைகளை தடுத்து நிறுத்துவதின் பெயரால் அப்பாவி மக்களை ஒடுக்கும் கைங்கரியங்கள் இங்கு நடக்காது பாதுகாப்பதும் அரசின் பொறுப்பேயாகும் என்று விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.