அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பாடகி எஸ்.ஜானகி
இடுப்பு எலும்பு முறிவை சரிசெய்ய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
சென்னையில் வசித்து வரும் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி சில நாட்களுக்கு முன்பு மைசூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் கால் இடறி கீழே விழுந்ததில் எஸ்.ஜானகியின் இடுப்பு எலும்பு முறிந்தது.
இதைத்தொடர்ந்து அவர் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். எலும்பு முறிவை சரி செய்ய அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து அவர் சனிக்கிழமை வீடு திரும்பினார்.
இதுகுறித்து எஸ்.ஜானகி கூறுகையில், “கர்நாடக மக்கள் என் மீது எப்போதும் அன்பைப் பொழிந்து வருகிறார்கள். அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கிறேன். எனக்கு மைசூரு நகரை எப்போதும் பிடிக்கும். இங்கு ஓய்வெடுக்க விரும்புகிறேன்.
வீட்டில் நுழையும்போது நான் கால் இடறி கீழே விழுந்துவிட்டேன். இதில் என் இடுப்பு எலும்பு முறிந்தது. அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.