அரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பான சுற்று நிரூபம் ஏற்புடையதல்ல
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக , உள்நாட்டலுவல்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சுற்று நிருபம் ஏற்புடையது அல்ல. அதில் உடனடியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சருமான அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு சமூகத்தினை சேர்ந்தவர்களும் அவர்களது கலாச்சாரத்தை பின்பற்றத்தக்க ஆடைகளை அணிவதற்கு சுதந்திரம் உள்ளது, அது அவர்களது அடிப்படை உரிமையுமாகும், மேற்கத்தைய ஆடை நடைமுறைகளை பின்பற்ற அனுமதிக்கப்படுகின்ற போது, இந்நாட்டின் ஒரு தேசிய இனத்தின் கலாச்சாரம், மதம் சார்ந்த விடயங்களை தடுக்கும் வண்ணம் பொறுப்புக் கூறுபவர்களின் செயற்பாடுகள் அமைந்து விடக் கூடாது, பாதுகாப்பு சூழல் கருதி அரசு முன்வைத்த சில தீர்மானங்களுக்கு நாட்டின் சமகால நிலையினை கருத்திற் கொண்டு முஸ்லிம் சமூகம் தனது முழுமையான ஒத்துழைப்பினை நல்கி வருகின்ற நிலையில் அவர்களை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில் ஒரு பாரிய நிகழ்ச்சி நிரலை நன்கு திட்டமிட்டு திணிப்பதற்கான நகர்வுகள் நடக்கிறதா என எண்ண வேண்டியுள்ளது.
குறித்த சுற்றுநிருபம் தொடர்பில் பிரதமர் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் விரைவில் அதில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கான உறுதி மொழிகள் குறித்த தரப்பினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பிரச்சாரங்களை கடந்த காலங்களில் முன்னெடுத்து வந்த முகவர்கள் ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலை மையமாக வைத்து நேரடியாக முஸ்லிம்களின் உயிர், உடமைகள், பொருளாதாரத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர், இதனால் சில பகுதிகளில் உயிர்களும் காவு கொள்ளப்பட்டுள்ளன, முஸ்லிம்கள் தமது புனித ரமழான் கடமைகளை அனுஷ்டிக்க முடியாமல் அல்லல்பட்டனர். மிக கேவலமான முறையில் வணக்கஸ்த்தளங்கள் குறி வைக்கப்பட்டன, இவ்வாறான செயலில் ஈடுபட்ட காட்டுமிராண்டிகளுக்கும் மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும் வேறுபாடுகள் ஏதும் இல்லை என்றே நாம் கருத வேண்டி உள்ளது.
கடந்த காலங்களில் முஸ்லிம்களை பாதுகாக்கும் விடயத்தில் அரசாங்கமும், பாதுகாப்பு பிரிவினரும் தமது கடமையினை சரியாகவும் சமமாகவும் மேற்கொள்வதில் பாரபட்சம் காட்டுகின்றனரா என்ற ஐயப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாத அளவிற்கு சில இடங்களில் பாதுகாப்பு தரப்பினர் முன்னிலையிலேயே தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது, இவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படா வகையில் அனைவரும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.
சட்டமும் ஒழுங்கும் எங்கும் சமமாகவும், சமத்துவமாகவும் பிரயோகிக்கப்படல் வேண்டும், ஒரு சாரார் மீது வன்மையாகவும், இன்னுமொரு சாரார் மீது மென்மையாகவும் நடைமுறைப்படுத்தப்படுவதான தோற்றப்பாட்டை கொண்ட துர்ப்பாக்கிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறு சிறு காரணங்களுக்காக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் சிறைகளிலே வாடிக் கொண்டிருக்கிறார்கள், தீவிரவாதிகளை விடுவியுங்கள் என நாம் ஒரு போதம் கோரவில்லை. ஆனால் எவ்வித நேரடி செயற்பாடுகளிலும் ஈடுபடாமல் சந்தேகத்தின் பேரில் கைதான அப்பாவிகள் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை அழுத்தமாக வேண்டிக் கொள்கிறேன்.
ஒரு சிறிய நாசகார குழுவினரின் செயற்பாட்டிற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பழி வாங்குவதும் தண்டிப்பதும் ஏற்புடையதல்ல, நாட்டை நேசிக்கும் முஸ்லிம் மக்கள் ஒருபோதும் இந்த தீவிரவாத செயற்பாடுகளை ஆதரித்தவர்கள் கிடையாது, இஸ்லாம் அமைதியையும், சகோதரத்துவத்தையும், தேசப்பற்றையும் போதிக்கும் மார்க்கம், ஆதலால்தான் சமகால பாதுகாப்பு தரப்பின் முன்னெடுப்புக்களுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பினை நல்கி தீவிரவாத வலையமைப்பை தகர்ப்பதற்காக முழு மூச்சுடன் பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், கடந்த கால முஸ்லிம்களது வரலாறுகளும் தேசியத்தின் மீதான அபிமானத்தை நிலைநிறுத்துவதாகவே என்றும் இருந்து வருகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் பங்காளர்களாகி நாம் வகிக்கும் அமைச்சுப் பதவிகளின் மூலமாக வெறும் அபிவிருத்திகளை மாத்திரம் மக்கள் எம்மிடம் எதிர்பார்க்கவில்லை , அவர்களது பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தினையும், சகஜ நிலையினையும் வேண்டி நிற்கிறார்கள், அவற்றை உறுதி செய்வதும் எமது தார்மீக கடமையாகும், இவற்றை செய்யாமல் இந்த பதவிகளை வகிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை, மக்கள் தங்களது பிரதிநிதிகளாக எம்மை தேர்வு செய்து அனுப்பியது அவர்களது நலன்சார் விடயங்களை முன்னெடுப்பதற்காகவே என்பதை உணர்ந்து அனைவரும் கட்சி, அரசியல் பேதங்களை மறந்து ஒன்றினைந்து செயலாற்றிட முன் வரவேண்டும்.
சமகால நிகழ்வுகள் தொடர்பில் எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறோம், அத்துடன் அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் இணைந்து செயலாற்றுவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்கிறோம், அனைவரும் ஒருமித்து சில தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே மக்கள் நிதானமாகவும் பொறுமையோடும் ஒற்றுமையுடன் நடந்து கொள்வது அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா மேலும் தெரிவித்துள்ளார்.