Main Menu

ஜனாதிபதியாக யார் நின்றாலும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆதரவு

எதிர்வரும் டிசம்பர் மாத கால பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாம் புதிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு எமது மலையக மக்களின் வாக்குகள் முக்கியமாக தேவைப்படும். புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்க்கு எமது கோரிக்கைகளை முன்வைத்து எமது கோரிக்கையினை பெற்றுக்கொள்ள வேண்டும். 

எமது கோரிக்கைகளை யார் ஏற்று கொள்கிறார்களோ அவர்களுக்கு நாம் ஆதரவு வழங்கி வாக்குகளை கொடுப்போம் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். 

தலவாக்கலை லோகி தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் குறித்த தோட்ட மக்களுக்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட 16 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த கால தேர்தலின் போது உள்ளூராட்சி சபைகளை கைபற்றிய சில அரசியல்வாதிகள் மலையகத்தில் இன்று அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுப்பதில்லை. மலையகத்தில் முன்னெடுக்கும் அனைத்து அபிவிருத்தி திட்டங்கள் எம்மால் கொண்டு வரப்பட்டது. 

மலையகத்தில் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாகவும் எனது அமைச்சின் ஊடாகவும் நிதியினை வழங்கி அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகிறேன். 

காலம் காலமாக மக்களை ஏமாற்றி வந்தவர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தல் கால பகுதியிலும் மக்களை ஏமாற்றுவார்கள் ஆகையால் மக்கள் தெளிவுடன் இருக்க வேண்டும். எமது மக்கள் மீண்டும் ஏமாற்றபட்டால் மக்களுக்கு தனி வீட்டுத்திட்டம் கிடைக்காது. மாடி வீட்டுத்திட்டம் தான் கிடைக்கபெறும். 

இந்த தலவாக்கலை லோகி தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கபட்ட மக்களுக்கு 16 தனி வீடுகள் அமைத்து தற்போது மக்களின் பாவனைக்கு கையளித்துள்ளேன். 

எமது நோக்கம் லயன் முறைமையை இல்லாதொழித்து கிராமங்களை உருவாக்குவது, ஆனால் கடந்த 50 வருட தலைவர்களுக்கு மீண்டும் வாக்குகளை வழங்கினால் எதிர்வரும் காலங்களில் எமது மக்களுக்கு சொந்த காணியில் வீடமைப்பு திட்டம் வாராது. எமது மக்கள் ஒற்றுமையாக இருந்தால் மலையகத்தில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். 

பகிரவும்...