அயோத்தி தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி
அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குறித்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
இதில் அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நெடுங்காலமாக சர்ச்சையில் இருந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் இராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மேலும், அங்கிருந்த மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது எனவும், மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதற்கிடையில், அயோத்தி தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி சில அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 18 சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.