Main Menu

குடியரசுத் தலைவர் ஒப்புதல்: குடியுரிமைச் சட்டம் அமுலுக்கு வருகிறது

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த வரைபுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

குடியரசு தலைவரின் ஒப்புதலை அடுத்து திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் குறித்த சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த வரைபை மாநிலங்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார். இதற்கு எதிராகவும் ஆதராகவும் கடும் விவாதம் நடைபெற்றது.

இதற்கிடையில், குடியுரிமை சட்டத் திருத்த வரைபை தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

சட்ட வரைபை தேர்வுக் குழுவுக்கு அனுப்பக் கூடாது என 124 உறுப்பினர்களும் அனுப்ப வேண்டும் என 99 உறுப்பினர்களும் வாக்களித்திருந்ததால் 25 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

இதைத்தொடர்ந்து, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்த வரைபு மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

இந்த வரைபு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரது ஒப்புதல் கிடைக்கப் பெற்றதும் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்த வரைபுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில் சட்டமாக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...