அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 பேர் பலி
அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் தலைநகர் ஹோனாலுலுவில் உள்ள கயிலுவா நகர் பிரபல சுற்றுத்தலமாக விளங்குகிறது. இங்கு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ஹோனாலுலுவில் இருந்து கயிலுவா நகருக்கு 2 பெண் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ஹெலிகாப்டர் கயிலுவா நகரை நெருங்கியபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து, அந்த ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானி உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். பலியான 2 பெண் சுற்றுலா பயணிகளில் ஒருவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் அறிய விசாரணை நடந்து வருகிறது.