Main Menu

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகள் வரை கோரி வந்த நிலையில், 13 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்ததாக கூறப்படுகிறது.

அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்கலாமா என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், அதிமுகவுடன் 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்ததால் உடன்பாடு ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் ஏற்பட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விஜயபிரபாகரன், தன்மானத்தை கைவிட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாது என்று கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதை தேமுதிகவினர் தீபாவளியாக கொண்டாடுவார்கள் என்றார்.

பாமகவின் கொள்கை பரப்புச் செயலாளராக கே.பி.முனுசாமி செயல்படுகிறார் என்றும் சுதீஷ் குற்றம்சாட்டினார். அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதை தேமுதிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பார்த்தசாரதி தெரிவித்தார்.

image
பகிரவும்...
0Shares