அடக்குமுறைகள் அதிகரிக்க தமிழர் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடும்- த.தே.ம.மு.
தமிழ் இனத்தின் மீது அடக்குமுறை கூடக்கூட தமிழ் மக்களின் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடிச்செல்லும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ‘எம் மாவீரர்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும் நினைவுகூரல்களையும் யாரும் தடுக்க முடியாது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் நிகழ்வு தொடர்பிலான நீதிமன்றத் தடையுத்தரவு மற்றும் வாகரை பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலே மாவீரர் துயிலுமில்லங்களை பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் வருடாவருடம் எமது மாவீரர்களின் நினைவுகூரலை செய்வதற்காக மாவீரர் துயிலுமில்லங்கைளை அப்பிரதேச மக்களுடன் இணைந்து துப்பரவுசெய்து வருகின்றோம்.
கார்த்திகை 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரைக்குமான காலப்பகுதியில் வேறு நிகழ்வுகளைத் தவிர்த்து எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடி, அவர்களின் உயிர்களைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூருவதற்காக எமது மக்கள் ஆயத்தமாகிக் கொண்டிருப்பார்கள்.
அந்த அடிப்படையிலே இவ்வருடமும் வடக்கு கிழக்கிலே உள்ள தமிழ் மக்கள் தங்களின் உறவுகளை, மாவீரர்களை நினைவுகூருவதற்கான பணிகளை ஆரம்பிக்கின்ற வேளை பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து நீதிமன்றத் தடையுத்தரவினால் தடுத்தும் வருகின்றார்கள்.
அந்தவகையில், நேற்று வாகரை மாவீரர் துயிலுமில்லத்தின் நிலைப்பாடு தொடர்பாக அறிவதற்காக நான் அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். அவ்வேளையில் அத்துயிலுமில்லத்தைச் சூழ பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு அங்கு யாருமே செல்லமுடியாத ஒரு நிலை காணப்படுகின்றது.
இருப்பினும் நான் அங்கு சென்று வருகின்ற வழியில் என்னை மாங்கேணியில் வைத்து வாகரைப் பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றார்கள். இனிமேல் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது, மக்களைத் தூண்டக் கூடாது என்றவாறு கடுமையான தொனியில் விரட்டினார்கள். அதற்கான பதிலை அவர்களுக்குத் தெரிவித்தேன். பின்னர் சுமார் எட்டு மணியளவில் என்னை விடுவித்தார்கள்.
கெடுபிடிகள் மூலம் என்னை அடக்கலாம். ஆனால், எம்மக்களின், எமது இனத்தின் உணர்வை அடக்க முடியாது. எங்களது உணர்வுகளைத் தடுக்கத்தடுக்க மீண்டும் மீண்டும் உங்கள் மீது, உங்கள் இராணுவத்தின் மீது, அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் மீது சர்வதேச அழுத்தங்கள் கூடுமே தவிர என்றும் குறையாது.
எங்களை அடக்கி ஒடுக்க முற்படுவது முட்டாள்தனமான வேலை. எங்களைப் பொருத்தவரையில் எத்தடைகள் வந்தாலும் வருடந்தோறும் எங்களுக்காக உயிர் நீர்த்தவர்களை நாங்கள் பூசிப்போம், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம், அவர்களை நினைவுகூருவோம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இந்த நாட்டின் நீதித்துறை பெரும்பான்மை இனத்தை மையப்படுத்தியதாக இருந்தாலும் நாங்கள் எங்களது உரிமைகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.
எமது மாவீரர்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும், எமது நினைவுகூரல்களையும் யாரும் தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.