Main Menu

“கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ” : காயமடைந்த நிலையிலும் பயணிகளைக் காப்பாற்றிய விமானியை பாராட்டிய பிரதமர் மோடி

கூரான ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நிலையிலும், ஆபத்தான சூழலில் 174 உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலையும் மன உறுதியையும் பாராட்டிய பிரதமர் மோடி, அவரது வீரச்செயல் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், பெரும் துயரத்தைத் தவிர்க்கவும் உதவியதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்,
“கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ. ஆபத்தான சூழலிலும், பலத்த காயமடைந்த நிலையிலும், மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்ற அவர் அளப்பரிய துணிச்சலையும் மன உறுதியையும் வெளிப்படுத்தினார்.
அவரது வீரச்செயல் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், பெரும் துயரத்தைத் தவிர்க்கவும் உதவியது. கேப்டன் மச்சார் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர் விரைவில் குணமடைந்து, நல்ல உடல்நலத்துடன் மீள பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கி மற்றும் கூரான ஆயுதத் தாக்குதல் உள்ளிட்ட ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், காயமடைந்த நிலையில், கேப்டன் ஸ்மித் மச்சார் வெளிப்படுத்திய சமயோசித புத்தியும் மன உறுதியும் பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இந்த செயல் தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.