Main Menu

மீனாட்சி அம்மன் கோவிலில் முதலமைச்சர் விஜய் – குடும்பத்தினரின் பெயரிலும் அர்ச்சனை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி வழிபட்ட தமிழக முதலமைச்சர் விஜய், தனது பெயரிலும் குடும்பத்தினரின் பெயரிலும் அர்ச்சனை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக செப்டம்பர் 28ஆம் திகதி மதுரை சென்ற முதலமைச்சர் விஜய், மீனாட்சி அம்மன் கோவிலில் சுமார் அரைமணி நேரம் வழிபட்டுள்ளார்.
இதன்போது, கோவிலின் சிறப்புகள் குறித்து சிவாச்சாரியார்கள் அவருக்கு விளக்கமளித்துள்ளனர்.
அவர்களிடம், ‘அம்மன் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. இப்போது தான் முதல் முறையாக வருகிறேன்’ என முதலமைச்சர் விஜய் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், மீனாட்சி அம்மன் ஏன் மானிடராக அவதரித்தார் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவர் ஆர்வமுடன் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரது நட்சத்திரம் பூசம் மற்றும் ராசி கடகம் என்பதை அறிந்திருந்த சிவாச்சாரியார்கள், யார் பெயரில் அர்ச்சனை செய்வது எனக் கேட்டுள்ளனர்.
இதற்கு முதலமைச்சர் விஜய், ‘விஜய் அண்ட் பேமிலி’ எனக் கூறியதைத் தொடர்ந்து, அவரது பெயரிலும் குடும்பத்தினரின் பெயரிலும் அர்ச்சனை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சுவாமி சன்னிதிக்குச் சென்ற விஜய், கொடிமரம் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய பின்னர் கோவிலிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதேவேளை, விஜய் கோவிலுக்குள் வழிபட்ட நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாகவும், இதனால் அவை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கோவில் வளாகத்தில் விஜய் நடந்து செல்லும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
மேலும், மதுரையை ஆண்ட திருமலை நாயக்கருக்கும் கடக ராசி மற்றும் பூசம் நட்சத்திரம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இதனை அடிப்படையாகக் கொண்டு விஜய்யின் கோவில் வருகை குறித்து அவரது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பக்தர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.