Main Menu

அனோஜனுக்கு தண்டனை குறைக்கப்படலாம் – சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர்

இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள தண்டனை குறைக்கப்படும் என தாம் நம்புவதாக சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் முஹீத் ஜீரான் தெரிவித்துள்ளார்.

அனோஜனின் பெற்றோரின் துயரமான நிலை குறித்து தாம் கவலைப்படுவதாகவும், அதேவேளை அவரது வழக்கை சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த முயற்சிக்கக்கூடும் என்பதை தாம் அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் மதத்தை நிந்திக்கும் வகையில் கருத்து வெளியிட்டதன் மூலம் அனோஜன் சவூதி அரேபிய சட்டத்தை மீறியதாக முஹீத் ஜீரான் தெரிவித்துள்ளார்.

எனினும், பின்னர் அனோஜன் தனது நிலைப்பாட்டை மாற்றி பகிரங்க மன்னிப்பு கோரி காணொளியொன்றை வெளியிட்டுள்ளதையும் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் அனோஜனுக்கு ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததோடு, பின்னர் இடம்பெற்ற மேன்முறையீட்டு நடவடிக்கையில் தண்டனை அதிகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தண்டனை தொடர்பில் இலங்கை அரசாங்கமும் சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, அனோஜனுக்கு ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என முஹீத் ஜீரான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தண்டனை நீக்கப்பட்டால் தண்டனைக் காலம் ஏழு முதல் பத்து ஆண்டுகளாக அதிகரிக்கப்படக்கூடும் எனவும், இறுதித் தண்டனை தொடர்பான தீர்மானம் சவூதி அரேபிய நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது எனவும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் முஹீத் ஜீரான் சுட்டிக்காட்டியுள்ளார்.