Main Menu

பிள்ளையான் உள்ளிட்ட மூவர் மீண்டும் விளக்கமறியலில்

மட்டக்களப்பில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2008 ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை, காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை மற்றும் வவுணதீவு – கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பிள்ளையான், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகிய இருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர்.

 

குறித்த 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் மற்றும் லண்டனில் வசிக்கும் பொலிஸ் பாய்ஸ் எனப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் பாய்ஸ் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

 

இந்த வழக்கு இன்று (29) திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, பிள்ளையான் காணொளி தொழில்நுட்பம் ஊடாக ஆஜர்படுத்தப்பட்டார்.

 

இதனைத் தொடர்ந்து, பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், லண்டனில் தலைமறைவாக உள்ள சந்தேகநபரான மொஹமட் பாய்ஸுக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.