Main Menu

உலக சவால்களுக்கு மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப இலங்கை அழைப்பு

உலகளாவிய மோதல்கள், காலநிலை பேரிடர்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அதிகரித்து வரும் சமத்துவமின்மைக்கு மத்தியில், நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச சட்டம், மனிதாபிமானம், தேசிய நல்லிணக்கம், நிலைபேறான அபிவிருத்தி மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் ஆற்றிய உரையின் முழு விபரம்:

பல நாடுகளால் தங்களை மாற்றிக்கொள்ளவோ ​​அல்லது எதிர்வினையாற்றவோ இயலாத வேகத்தில், உலகம் முழுவதும் மிக முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் தெளிவு, நேர்மை மற்றும் தொழிற்பாடு ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனர்.

இந்த ஆண்டின் பொதுக்கூட்டத்தின் கருப்பொருளான — “நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றங்களை முகாமைசெய்தலினூடாக: அனைவருக்கும் பயனளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை” — என்பது மனதில்  நிலைத்துநிற்பதோடு, சவாலொன்றாகவும் விளங்குகிறது.

தீர்க்கப்படாத மோதல்கள், கிடைக்கக்கூடிய வளங்களுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமான நெருக்கடிகள், அடிக்கடி நிகழும் காலநிலை பேரிடர்கள், அதிகரித்து வரும் சமத்துவமின்மை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பின் வேகத்தை விட மிக வேகமாக முன்னேறும் தொழில்நுட்ப  அதிகரிப்புக்கள் ஆகியவற்றில் நம்பிக்கை சிதைவு வெளிப்படுகிறது.

இச்சூழலில், உலகளாவிய நாடுகள் மக்களுக்கு உரியவாறு சேவையாற்றுவது கணிசமானளவிலான சவாலே என்ற எண்ணத்தை வலுப்படுத்தியுள்ளன.

இலங்கை இந்த யதார்த்தத்தை ஆழமாகப் புரிந்துகொண்டுள்ளது.

நம்பிக்கையின்மை மற்றும் சமூக ஒப்பந்த மீறல்களால் ஏற்படும் விளைவுகளை எனது நாடு கடந்த காலங்களில் பலமுறை அனுபவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எமது வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, அனைத்து சமூகங்களையும் மற்றும் பல்வேறு தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக, இலங்கை மக்கள், இச்சவால்களை எதிர்கொள்ளவும் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு வலுவான ஆணையை வழங்கினர். அப்போதிலிருந்து, எமது அரசாங்கம் நம்பிக்கையை அடியிலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப உறுதியுடன் செயற்பட்டு வருகிறது. வெறும் வார்த்தைகள் மூலமல்ல, செயல்கள் மூலமே நாம் நம்பிக்கையை வளர்க்கிறோம்; அதாவது, வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், ஒழுக்கம் மற்றும் தவறுகளை எதிர்கொள்ளும் துணிச்சல் ஆகியவற்றின் மூலம் இது முன்னெடுக்கப்படுகிறது. எனவே, இலங்கையும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் மற்றும் புத்துயிர் பெறும் செயன்முறையை நோக்கிப் பயணித்து வருகிறது.

மேற்கு ஆசியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்கள் மற்றும் இலங்கையைத் தாக்கிய சூறாவளி போன்ற காலநிலை பேரிடர்கள் இருந்தபோதிலும், 2022-ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு எனது நாடு பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்துள்ளது. இன்று, இலங்கை உலக வங்கியால் ‘உயர்-நடுத்தர மட்ட வருமானம் கொண்ட பொருளாதாரம்’ என மீள்வகைப்படுத்தப்பட்டுள்ளது; மேலும், மதிப்பீட்டு முகமைகளும் இந்த நேர்மறையான முன்னேற்றத்தை அங்கீகரித்துள்ளன.

இருப்பினும், கடன் சுமை மற்றும் வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு ஆளாகக்கூடிய நாடுகளின் பாதிப்புத்தன்மையை இந்த முன்னேற்றங்கள் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. கடின உழைப்பால் எட்டப்பட்ட இந்த ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த நாங்கள் எமது உலகளாவிய கூட்டாளிகளுடன் இணைந்து செயற்படும் அதே வேளையில், பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் களைவதன் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்துள்ளோம்.

இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றான தித்வா சூறாவளி, நாட்டின் பல பகுதிகளைச் சீர்குலைத்தது. இப்பேரிடரால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், இருபது லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்; மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டதுடன், மிக முக்கியமான உட்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.

இந்தத் துயரத்தை நேரில் அனுபவித்தவர்கள் என்ற முறையில், நேபாளம் மற்றும் சீனாவில் இமயமலைப் பகுதி வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்களை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மிகப்பெரிய மனித மற்றும் பொருளாதார இழப்புகளை இந்தத் துயர நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. வருந்தத்தக்க வகையில், உலகளாவிய உமிழ்வுக்கு மிகக் குறைந்த அளவில் பங்களித்த நாடுகளே இதன் மிகக் கடுமையான விளைவுகளைத் தொடர்ந்து சுமக்கின்றன.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கான அழைப்பு என்பது உடனடித் தேவை மட்டுமல்ல; அது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒன்றாகும். காலநிலை நீதி என்பது உடனடியானதொரு யதார்த்தமாக மாற வேண்டும். எமது தரப்பைப் பொறுத்தவரை, 2030-க்குள் 70 சதவீத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் 2050-க்குள் கார்பன் சமநிலை ஆகிய இலக்குகளை அடைவதற்கான பாதையில் இலங்கை பயணித்து வருகிறது.

மூன்று தசாப்தங்களாக, இலங்கை ஒரு நீண்டகால மோதலுக்கு உள்ளானது; இது எமது அனைத்து சமூகங்களுக்கும் மிகப்பெரிய இழப்பையும் துயரத்தையும் ஏற்படுத்தியது. 17 ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்திருந்தாலும், அந்த மோதலின் ஆழமான வடுக்கள் இன்னும் உள்ளன; அவற்றை ஆற்றுவதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. அத்தகைய துயரம் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் பயணிக்கவும் நாங்கள் உறுதியாக உள்ளோம். இது தொடர்பாக, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எமது அரசாங்கம் தேசிய நிறுவனங்களை வலுப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இனவாதம் மற்றும் மதத் தீவிரவாதத்தை அவற்றின் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் நிராகரிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்து வருகிறோம். மிகவும் பாதுகாப்பானதும், அனைவரையும் உள்ளடக்கியதும் மற்றும் ஒற்றுமையானதுமானதொரு ஒரு தேசத்தை உருவாக்க நாம் அயராது தொடர்ந்து உழைப்போம் — பன்முகத்தன்மையின் முழுமையான செழுமையால் வலுவூட்டப்பட்ட ஒரு தேசத்தை உருவாக்குவோம்.

இயற்கை அனர்த்தங்களின் விளைவுகளுக்கு மேலதிகமாக, பல நாடுகளைப் போலவே இலங்கையும் மேற்கு ஆசியா மற்றும் ஏனைய பகுதிகளில் நிலவும் மோதல்களின் கடுமையான தாக்கங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்தியப் பெருங்கடலின் முக்கிய சந்திப்பில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகவும், மேற்கு ஆசியாவில் பெருமளவிலான புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்ட நாடாகவும் இருப்பதால், இத்தகைய நிகழ்வுகள் எமக்கு நேரடியாக பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக ரீதியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய சவாலான காலங்களிலும் கூட, சர்வதேச சட்டத்தின் மீதான தனது கடப்பாடுகளை இலங்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதுடன், மனித உயிர்களின் புனிதத்தன்மையையும், மனித கண்ணியத்தையும் உறுதி செய்து வருவதைக் குறிப்பிடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நிலையற்ற புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில், மோதலில் ஈடுபட்டுள்ள ஒரு தரப்புக்குச் சொந்தமான கப்பல் ஒன்று எமது கடல் எல்லைக்கு அருகில் ஆபத்தான நிலையில் இருப்பதையும், அதில் பல மீனவர்களின் உயிர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதையும் இலங்கை கண்டறிந்தது. பல்வேறு உணர்வுபூர்வமான சிக்கல்களைக் கையாள்வது மற்றும் காயமடைந்தவர்களையும், நோயுற்றவர்களையும் மீட்பதற்கும் பராமரிப்பதற்கும் எமது மட்டுப்படுத்தப்பட்ட தேசிய வளங்களை ஒருங்கிணைப்பது ஆகிய கடினமான பாதையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். சவால்கள் நிறைந்ததாக இருந்தபோதிலும், நாங்கள் மேலும் நூற்றுக்கணக்கானவர்களை மீட்டோம். ஆபத்தில் இருந்த மனித உயிர்களைக் கண்ட நாங்கள், சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமானம் ஆகியவற்றின் அடிப்படையில் செயற்பட்டோம். எமது நடுநிலைத்தன்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், எல்லாவற்றிற்கும் மேலாக மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை அளித்தோம். ஜனாதிபதி திஸாநாயக்க அவர்கள் மீண்டும் வலியுறுத்தியது போல, “மனிதாபிமானத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் ஒருபோதும் தயங்கமாட்டோம். மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின், எந்தவொரு சூழ்நிலையிலும் அவற்றை மேற்கொள்வதில் நாங்கள் தயங்கமாட்டோம்.”

மோதல்கள் மற்றும் ஆழமான பிளவுகள் நிலவும் காலங்களிலும் மனிதாபிமானத்திற்கு இடமுண்டு என்று நம்பும், பரந்த மனப்பாங்குடைய ஒரு சிறிய தீவு நாடாகவே இலங்கையை நாங்கள் உலகிற்கு முன்னிறுத்த விரும்புகிறோம்; அதே மனப்பாங்கு உலகிலும் பிரதிபலிக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். மனிதகுலத்தை அழிக்கும் திறனை விட, அதனைக் காக்கும் திறன் வேகமாக வளரும் ஒரு உலகம் நமக்குத் தேவை; அத்தகைய மாற்றத்தையே நாம் நாட வேண்டும்.

இக்காரணங்களினாலேயே, காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகள் எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன.

சமீப காலங்களில் உலகளாவிய பாதுகாப்புச் சூழல் கணிசமாக மோசமடைந்துள்ளது. மிகுந்த செல்வமும் அறிவும் கொண்ட இவ்வுலகில், சிறுவர்கள் பட்டினியால் வாடுவதோடு மருத்துவம் மற்றும் கல்வியும் மறுக்கப்படும் நிலையில், ஆயுதங்களுக்காகப் பெருமளவிலான வளங்கள் தொடர்ந்து செலவிடப்படுவதை ஏற்றுக்கொள்வது கடினமாகவுள்ளது..

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் அப்பிராந்தியத்திற்கு அப்பாலும், மோதல்களால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் உள்ளிட்ட சர்வதேசச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். பேச்சுவார்த்தை மட்டுமே முன்னேற்றத்திற்கான ஒரே சாத்தியமான வழி என்ற எமது நிலைப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

சுயநிர்ணய உரிமை உட்பட பாலஸ்தீன மக்களின் மறுக்க முடியாத உரிமைகளை இலங்கை தொடர்ந்து ஆதரிக்கிறது. 1980-களில் பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடுகளில் நாங்களும் ஒருவராவோம். 1967-க்கு முந்தைய எல்லைகளுக்குள் இஸ்ரேலுடன் இணைந்து அமைதியான முறையில் நிலவும், சுதந்திரமான மற்றும் இறைமையுள்ள பாலஸ்தீன அரசை உருவாக்க வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்.

காசாவில் போர்நிறுத்தம் தொடர்பான பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம்; அத்துடன் அனைத்துத் தரப்பினரும் அதனை மதித்து நடக்குமாறு வலியுறுத்துகிறோம். மனிதாபிமான உதவிகள் எவ்விதத் தடையுமின்றி பொதுமக்களைச் சென்றடைய வேண்டும். காசாவின் மீட்சி மற்றும் புனரமைப்புப் பணிகள் அவசர முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும்.

உலக அமைதி மற்றும் பாதுகாப்பை நோக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளுக்கு இலங்கை ஆற்றிவரும் நீண்டகாலப் பங்களிப்பு குறித்து பெருமிதம் கொள்கிறது. 1957-ஆம் ஆண்டு முதல் எண்ணற்ற பணிகளில் 21,000-க்கும் மேற்பட்ட வீரர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.

எமது நீலத் தலைக்கவச வீரர்களான அமைதிகாக்கும் படையினர், பல ஆண்டுகளாகத் தங்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையின் மூலம், உள்ளூர் சமூகங்களின் நம்பிக்கையையும், ஐக்கிய  நாடுகளின் களப் பணிகளின் பாராட்டையும் பெற்றுள்ளனர்.

இன்றும், அவர்கள் ஐக்கிய நாடுகளின் கொடியின் கீழ் மிகவும் சவாலான சூழல்களில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர் — பாதிக்கப்படக்கூடிய பொதுமக்களைப் பாதுகாத்தல், வன்முறையைத் தடுத்தல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மோதலில் இருந்து ஸ்திரத்தன்மைக்கு மாறுவதற்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்கின்றனர்.

இலங்கை, இந்தியப் பெருங்கடல் அமைதி மண்டலத்திற்கான எமது ஆரம்பகால அழைப்பு முதல் 1995-ஆம் ஆண்டு அணுஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்த மீளாய்வு மற்றும் நீட்டிப்பு மாநாட்டில் நாங்கள் தலைமை தாங்கியது வரை, பலதரப்பு ஆயுதக் குறைப்பை நீண்டகாலமாக ஆதரித்து வருகிறது.

அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அணுஆயுதப் பெருக்கம் குறித்த சொல்லாடல்கள் நிலவும் இக்காலத்தில், இந்த ஆயுதங்களுக்கு எதிரான ஒரே உண்மையான உத்தரவாதம், அவற்றை முழுமையாகவும் சரிபார்க்கக்கூடிய வகையிலும் ஒழிப்பதே என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

2030-ஆம் ஆண்டை நாம் நெருங்கும் வேளையில், நிலைபேறான அபிவிருத்திக்கான நமது கூட்டு வரைபடமாகத் திகழும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நாம் நிறைவேற்ற வேண்டும். சர்வதேச நிதியியல் முறைமையில் சீர்திருத்தம் செய்யவும், கடன் மற்றும் அபிவிருத்தி நிதியைக் கட்டுப்படுத்தும் நியாயமான விதிகளை ஏற்படுத்தவும் இலங்கை மீண்டும் அழைப்பு விடுக்கிறது. வளரும் நாடுகளில் நிலைபேறான அபிவிருத்திக்கான நான்கு டிரில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அழைப்பு உட்பட, கடந்த ஆண்டு செவில் ஈடுப்பாட்டை நாங்கள் வரவேற்றோம். இது உறுதிமொழிகளை, திடமான செயல்களாக மாற்றுவதற்கான நேரமாகும்.

வறுமை மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றை நமது உடனடிக் கவனம் தேவைப்படும் காரணிகளாக அங்கீகரிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கடந்த ஆண்டு எமது தேசிய வரவு செலவுத் திட்டத்தில், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. இலவச மற்றும் அனைவருக்கும் பொதுவான சுகாதாரம் மற்றும் கல்வி என்ற எமது நீண்டகாலக் கொள்கையில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் சமூக நீதியின் இந்த முக்கியத் தூண்களை வலுப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அனைத்து நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளையும் பாகுபாடின்றி தீவிரமாகச் செயற்படுத்தும் அதே வேளையில், பொது நம்பிக்கையை உருவாக்கி மீட்டெடுத்து, அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் நீதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிறுவனங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் 16-ஐ நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வதோடு, அதனை நோக்கி முனைப்புடனும் செயற்படுகின்றோம்.

நாங்கள் வடிவமைக்க உதவிய ‘கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையின்’ (UNCLOS) கீழ், கடலில் நியாயமான மற்றும் அமைதியான ஒழுங்குமுறையை நிலைநாட்டவும், மேம்படுத்தவும் இலங்கை நீண்டகாலமாகப் பங்காற்றி வருகிறது. ‘கண்ட அடுக்கு எல்லைகள் குறித்த ஆணையத்தின்’ பணிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். அமைதியானதும், நிலைபேறானதுமான பயன்பாட்டிற்கும், சர்வதேச ஒத்துழைப்பிற்கும் ஏற்ற பொதுவான இடமாகப் பெருங்கடல்களைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்கள் நாட்டின் செழுமை இந்தியப் பெருங்கடலுடன் நெருங்கிய தொடர்புடையது.

‘தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மை குறித்த உடன்படிக்கை’யின் (BBNJ உடன்படிக்கை) ஒரு நிறுவன உறுப்பினராக, தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியமாகப் பெருங்கடல்களைப் பாதுகாப்பதில் எமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

சர்வதேசக் கடல்சார் தரைப்பகுதி ஆணையத்தின் செயன்முறைகளுக்குத் துணையாக அமையும் வகையில், இந்த உடன்படிக்கை மேலும் முழுமையாகச் செயற்பாட்டிற்கு வருவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

இலங்கை மக்களால் எங்களுக்கு வழங்கப்பட்ட தீர்க்கமான ஆணையின் முக்கிய தூண்களில் ஒன்று, வெளிப்படையான மற்றும் அறநெறி சார்ந்த ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதாகும். இந்த ஆணையை நிறைவேற்றும் வகையில், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான தேசிய நேர்மைக்கான முன்னெடுப்பின் மையமாக நல்லாட்சி, ஊழல் ஒழிப்பு மற்றும் நிறுவன ரீதியான வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை நாங்கள் அமைத்துள்ளோம்.

ஊழல் எவ்வாறு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது மற்றும் நம்பிக்கையைச் சிதைக்கிறது என்பதை நாங்கள் மிகத் தெளிவாகக் கண்டுள்ளோம். ஒரு நபரின் பின்னணி அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், அச்சம் அல்லது பாரபட்சமின்றி ஊழலுக்கு எதிரான சட்டத்தை நாங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். அரசியல் தலையீடு ஏதுமின்றி விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடரும் பொறுப்பைக் கொண்ட நிறுவனங்களின் சுதந்திரத்தை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இச்சபையில் உரையாற்றிய எனது ஜனாதிபதி, போதைப்பொருள் மற்றும் அது தொடர்பான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பல நாடுகளுக்கு எவ்வாறு ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன என்பதையும், இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள எமது அரசாங்கம் மேற்கொண்டு வரும் விரிவான முயற்சிகளையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஓராண்டுக்குப் பிறகு, போதைப்பொருள் விநியோகச் சங்கிலியில் உள்ள முக்கிய நபர்களைக் கைது செய்தது உட்பட, எமது “ஒரே தேசமாக ஒன்றிணைவோம்” (United as a Nation) எனும் போதைப்பொருள் எதிர்ப்புத் தேசியத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

அர்த்தமுள்ள தொழில்நுட்பப் பரிமாற்றங்களை ஊக்குவித்தல், வளரும் நாடுகளுக்குச் சமமான அணுகலை உறுதி செய்தல், டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்தல் மற்றும் யாரையும் விட்டுவிடாத பாதுகாப்பான, நம்பகமான அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்ற எமது அழைப்பை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

அனைவரையும் உள்ளடக்கிய ஒரு டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் இலங்கை ஈடுபட்டுள்ளது. சர்வதேசக் கட்டமைப்புகளுக்கு இணங்க, செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான தேசிய நெறிமுறைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை பொறுப்புடனும், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் நன்கு நிறுவப்பட்ட கோட்பாடுகள் உள்ளிட்ட சர்வதேசச் சட்டங்களுக்கு இணங்கவும் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அவற்றின் உருவாக்கமும் பயன்பாடும் மனிதகுலத்தின் கூட்டு நலன்களை மேம்படுத்துவதோடு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் பங்களிப்பதாக அமைய வேண்டும்.

மனிதகுலத்தின் நலன்களே இத்தொழில்நுட்பங்களின் உருவாக்கம் மற்றும் பயன்பாட்டை எப்போதும் வழிநடத்த வேண்டும்.

இலங்கைக்கு, ஐக்கிய நாடுகள் சபை ஒரு இன்றியமையாத பங்காளியாகும். சவாலான காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை நம்முடன் துணை நின்று, நமது வளர்ச்சிக்கு ஆதரவளித்துள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள  நம்மில் பலருக்கு, ஐக்கிய நாடுகள் சபை ஒரு அடிப்படை வாக்குறுதியின் வெளிப்பாடாகவும் விளங்குகிறது: அதாவது, பெரியதோ சிறியதோ ஒவ்வொரு தேசத்திற்கும் குரல் உண்டு; ஒவ்வொரு மக்களுக்கும் கண்ணியத்திற்கும் வளர்ச்சிக்கும் உரிமை உண்டு; மேலும், நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உலகில், எந்தவொரு நாடும் உலகளாவிய சவால்களைத் தனியாக எதிர்கொள்ள தேவையில்லை.

எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக, அதன் குறைபாடுகளுக்கு மத்தியிலும், மேம்பாட்டிற்கு அதிக இடமிருந்தபோதிலும், ஐக்கிய நாடுகள் சபை அந்த வாக்குறுதிக்கு நடைமுறைப் பொருளை அளித்துள்ளது.

இருப்பினும், பலதரப்புவாதத்தின் மீதான உண்மையான நம்பிக்கைக்கு, அமைப்பு எங்கே தவறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளும் துணிவும், தங்கள் குரல் கேட்கப்படவில்லை என்று உணர்பவர்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் பணிவும், நமது நிறுவனங்களை மேலும் திறம்பட்டதாகவும், மேலும் பிரதிநிதித்துவமுள்ளதாகவும், மேலும் பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கான உறுதியும் தேவைப்படுகிறது.

இந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையைப் புதுப்பித்து வலுப்படுத்தவும், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை முன்னெடுக்கவும் ஒரு வாய்ப்பாக UN80 முன்முயற்சியை இலங்கை ஆதரிக்கிறது.

மாற்றத்தை நிர்வகிப்பது என்பது, சிலருக்காக மாற்றத்தை நிர்வகித்துவிட்டு, மற்றவர்களை அதன் விளைவுகளுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளுமாறு கேட்பதாக அமையாது.

நம் உலகில் நிகழும் மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

அது, வடக்குக்கும் தெற்குக்கும் இடையேயான பிளவுகளையும்; புதிய தொழில்நுட்பங்களை வடிவமைப்பவர்களுக்கும் அவற்றை வெறுமனே ஏற்றுக்கொள்பவர்களுக்கும் இடையேயான பிளவுகளையும்; மீள்திறன் கொண்டவர்களுக்கும் உலகளாவிய அதிர்ச்சிகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்களுக்கும் இடையேயான பிளவுகளையும் ஆழப்படுத்தாமல், மாறாக குறைக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையால் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்ற எதிர்பார்ப்புடன் மட்டும் எனது நாடு இந்தப் பேரவைக்கு வரவில்லை; மாறாக, எந்தவொரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உள்ளன என்ற உறுதியான நம்பிக்கையுடன் வருகிறது.

எனவே, பன்முகத்தன்மையின் மீதான புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையும், இன்னும் உன்னிப்பாகச் செவிசாய்க்கும், நேர்மையுடன் செவ்வனே பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு ஐக்கிய நாடுகள் சபையே நமது பதிலாக இருக்க வேண்டும் – என்றார்.