Main Menu

ஈரானின் சமரசத் திட்டத்திற்கு ட்ரம்ப் மறுப்பு

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் அப்பகுதியில் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஈரானின் முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்துவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (26) சனிக்கிழமை உறுதிப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, இராஜதந்திரப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இந்த மோதலைத் தீர்க்க முடியும் என்று தெஹ்ரான் ஞாயிற்றுக்கிழமை (27) மீண்டும் வலியுறுத்தியது.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இந்த முன்முயற்சி முன்னதாகவே முன்வைக்கப்பட்டது.

கட்டார் நாட்டு மத்தியஸ்தர்கள் வாயிலாக வொஷிங்டனுக்குத் தெரிவிக்கப்பட்ட இந்த ஏழு நாள் செயல் திட்டம், விரோதப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, முக்கியமான அந்த நீர்வழியையும் மீண்டும் திறக்க வழிவகுக்கும் என்று ஈரான் விவரித்தது.

இந்த நிலையில், சனிக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானின் முன்மொழிவை நிராகரித்ததாகக் கூறினார்.

இதனை அவர் உண்மையான நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக அல்லாமல், தெஹ்ரானின் பலவீனத்தின் அடையாளமாகவே சித்தரித்தார்.

அந்த ஆட்சியின் மீது பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதாலேயே ஈரான் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்ள முற்படுவதாக வாதிட்ட அவர், அந்நாடு கடும் பின்னடைவைச் சந்தித்து வருவதாலும் நிதி ஆதாரம் தீர்ந்து வருவதாலும் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ட்ரம்பின் கருத்தினை அடுத்து தமது நிபந்தனைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், தனது அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்பதற்கு முன்னதாக மத்தியஸ்தர்கள் வாயிலாக ஒரு உறுதியான பதிலுக்காக காத்திருப்பதாகவும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்களை நிறுத்துமாறு தெஹ்ரானுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களால் அப்பகுதி வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளது.

அதே நேரத்தில், அந்த நீர்வழிப்பாதையை அமெரிக்கா கட்டுப்படுத்துவதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.